திருப்பாவை – 10

தெளிந்து வந்து கதவைத் திற என்பது

pasuram10
Thanks: Krishna For Today

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநான்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற ஆனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

அழகிதாக நோற்று இன்ப நுகர்ச்சியை இடைவிடாது நுகர்கின்ற அம்மே வாசற் கதவைத் திறவாதவர்கள் ஒரு வாய்ச்சொல்லும் சொல்லமாட்டாரோ? முற்காலத்திலே கூற்றத்தின் வாயில் வீழ்ந்து இறந்த கும்பகர்ணனும் உனக்குத் தோற்றுப் போய்ப் பேருறக்கத்தைத் தானே தந்தானோ? மணம் கமழ்கின்ற திருத்துழாய் அணிந்த திருமுடியை உடையவனும், எவ்வுயிரையும் காப்பவனுமான நாராயணன் அன்புடையவர்களாகிய நம்மாலே மங்களாசாசனம் பண்ணப்பட்டு நமக்கு வேண்டும் தொண்டாகிய பயனைத் தருபவனாய் நிலைநின்ற அறவாழி அந்தணன். ஆதலால், பெருந்தூக்கத்தையுடையவளே! எங்களுக்கு அணிபோன்றளே! தடுமாற்றமின்றித் தெளிந்து வந்து கதவைத் திறப்பாயாக.

நன்றி: திருப்பாவை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சென்னை, 1995.

திருப்பாவை – 9

மாமீர் உம்மகளை எழுப்பீரோ என்பது

andal_108

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

குற்றமற்ற மணிகள் அழுத்திக் கட்டப்பட்ட மாளிகையில் நாற்புறத்தும் விளக்குகள் எரியவும், நறுமணப்புகை எங்கும் மணக்கவும், அன்னத்தூவியாற் செய்த மென்மையான படுக்கையின் மேல் கண்ணுறங்குகிற அம்மான் பெண்ணே! மாணிக்கக் கதவினுடைய தாழ்ப்பாளைத் திறப்பாயாக. மாமியரே, உள்ளே உறங்குகிற உம்மகளை எழுப்பமாட்டீரோ? உம்முடைய மகள் தான் வாய்ப்புலன் இல்லாதவளோ?  செவிப்புலனற்றவளோ? பேருறக்கம் உடையவளோ? எழுந்திராவண்ணம் காவலிடப்பட்டாளோ? நெடும்போது உறங்கும் படி மந்திரத்தால் கட்டப்பட்டாளோ? அளவிட்டுச் சொல்லக்கூடாத வியத்தகு குணங்களையும் செயல்களையும் உடையவனே, திருமகள் கேள்வனே, வைகுண்ட நாதனே என்று இவ்வாறாக எம்பெருமானுடைய ஆயிரக்கணக்கான திருநாமங்களையும் வாயாரச் சொல்லினோம். இனியேனும் உம் மகளை எழுப்பலாகாதே என்றனர்.