திருப்பாவை – 30

தமிழ்மாலை முப்பதால் சார்வர் பேரின்பு

12540840_930365443717289_3550292833026372142_n.jpg
நன்றி: Krishna For Today

 

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்

கப்பல்களை உடைய திருப்பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் தந்தருளின திருமகள் நாதனான கண்ணபிரானை நிறைமதியை ஒத்த அழகிய முகத்தையும் செவ்விய அணிகலன்களையும் உடைய ஆயர் மகளிர் சென்று வணங்கி மங்களாசாசனம் பண்ணி, அத்திரு ஆய்ப்பாடியில் நாட்டுக்குப் பறையென்றறொரு தலைக்கீட்டையிட்டுத் தாங்கள் அடிமையைக் கைக்கொண்ட வரலாற்றை அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருவவதரித்தவரும் குளிர்ந்த புதிய தாமரை மலர்களாலாகிய மாலையை உடையவரும் உத்தமருமான பெரியாழ்வாருடைய திருமகளாரான ஆண்டாள் அருளிச்செய்த, திரள் திரளாகக்கூடி அனுபவித்த பிரபந்தமாய்த் தமிழ்ப் பாமாலையான முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இந்தச் சமுசாரத்திலே இப்பாசுர மாத்திரத்தைச் சொல்லுமவர்கள் எல்லா இடங்களிலும் பெரிய மலையை யொத்துத் திண்ணிதாயிருந்துள்ள நான்கு திருத்தோள்களையும் சிவந்த திருக்கண்களையும் அழகிய திருமுக மண்டலத்தையுமுடையவனாய்த் திருமகள் நாதனாய் உள்ள நாரயணன் அருளப் பெற்றுப் பேரின்பத்துடன் வாழ்வர்.

நன்றி: திருப்பாவை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சென்னை, 1995.

திருப்பாவை – 29

எந்நாளும் அடிமையாயிருக்க வேண்டல்

10406834_929885150431985_4532974253832965854_n.jpg
நன்றி: Krishna For Today

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

பசுக்களைக் காக்கும் கண்ணபிரானே, மிகவும் விடியற்காலையிலே இங்கு வந்து தேவரீரை வழிபட்டுத் தேவரீருடைய அழகிய தாமரை மலர்போன்ற திருவடிகளை மங்களாசாசனம் பண்ணுகைக்குப் பயனைக் கேட்டருள வேண்டும். பசுக்களை மேய்த்துப் பின்பு உண்ணும் இடைக்குலத்தில் திருவவதரித்த தேவரீர் எங்களிடத்தில் அந்தரங்க கைக்ர்யங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருத்தல் கூடாது. பசுக்களைக் காப்பாற்றுபவரே தாங்கள் கொடுக்கும் பறையைப் பெற்று இன்றைக்கு அகலுகைக்கு நாங்கள் வந்தோமல்லோம் காலமுள்ளதனையும் தேவரீருடைய எவ்வவதாரங்களிலும், தேவரீருடைய உறவு உடையவர்களாகக் கடவோம்.  தேவரீருங்கே நாங்கள் அடிமை செய்யக் கடவோம். எங்களுக்கு வேறு பொருளில் உண்டாகும் விருப்பங்களைத் தவிர்த்தருள வேண்டும்.

நன்றி: திருப்பாவை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சென்னை, 1995.