வசந்த காலம்

பல்லவர் சோழர் சேரர் பாண்டியர் உள்ளிட்ட பல அரசர்கள் நம் தமிழகத்தின் பல பகுதிகளை சிறப்பாக ஆண்டுள்ளனர். அவர்களுள், சங்ககாலத்தை சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான நெடுமான் அஞ்சியைப் பற்றிய கதையே வசந்த காலம். தலைநீர் நாடு (ஒகேனக்கல் அருவின் சங்ககாலப் பெயர்) என்று அன்று அழைக்கப்பட்ட தகடூர் என்ற நாட்டை ஆண்டு வந்தார் நெடுமான் அஞ்சி.

நெடுமான் அஞ்சி உடல் நலக்குறைவினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், ஆதரவற்ற தகடூர் கோட்டையை கைப்பற்ற சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை, தன்னுடைய படைத்தலைவர்களுள் ஒருவனும், தகடூர் அரசரின் மருமகனுமான இளந்திரையனைக் கொண்டு திட்டம் தீட்டுகிறான்.

நெடுமான் அஞ்சியின் மகளும் தகடூர் இளவரசியுமான மலர்விழி, தன் உள்ளத்தை கவர்ந்த அத்தை மகனான இளந்திரையனை தன் வசப்படுத்தி, தன் பக்கம் கொண்டுவரவும், தகடூர் படைகளை தலைமை தாங்கும் நிலையை உருவாக்கவும் கோஸ்வாமி என்ற மந்திரவாதியிடம் உதவி நாடுகிறாள். கோஸ்வாமியும் வசியம் செய்ய வழிசெய்கிறான்.

சேரமான், மலர்விழி  ஆகிய இருவரின் திட்டத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இளந்திரையன் எவ்வாறு தகடூர் கோட்டையை கைப்பற்றுகிறான் என்பதுதான் கதை.

கொடையிலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய இந்த நெடுமான் அஞ்சி தான் ஔவைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கின்றன.

vasanthakalam__74215_zoom

ஆசிரியர் சாண்டில்யன்
பதிப்பகம் வானதி
பதிப்பு 2011 (முதல் பதிப்பு 1960)
பக்கங்கள் 120
விலை ரூ.30

யாழ் நங்கை

தன் பழம்பெருமையை இழந்த சோழப் பேரரசு, விஜயாலய சோழனின் பராக்கிரமத்தால் புத்துணர்ச்சி பெற்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகையை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவடைய தொடங்கிய காலம் அது. பல்லவப் பேரரசு அபராஜித வர்மனின் ஆட்சியில் காவிரியாற்றங்கரை வரை பரவியிருந்த அவ்வேளையில், பாண்டியர்கள் பல்லவ தேசத்தின் தென் எல்லையில் சில பகுதிகளை கைப்பற்றியிருந்தனர்.  பாண்டியர்களும், பல்லவர்களும் தங்கள் மேலாட்சியை நிலைநாட்டி மற்றவரை ஆள தக்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர்.

விஜயாலய சோழனும் அவனது மகனான அதித்த சோழனும் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்த தக்க சமயத்தை எதிர்நோக்கியிருந்தனர். இளவரசனான ஆதித்தன் படையை பெருக்குவதில் மிகவும் கவனம் கொள்கிறார். ஆனால் அவர் எண்ணிய படி படை திரட்ட முடியவில்லை. பாண்டியர்கள் தஞ்சைக்கு படையெடுக்க ஆயத்தமாகின்றனர். அதன் முன்னோட்டமாக உளவறிய வந்து சிறைபட்ட பாண்டிய ஒற்றன் எயினன் சிறையிலிருந்து தப்பிவிடுகிறான்.

சோழ நாட்டின் தென் எல்லையில் வாழும் பாடினி பெண்ணான பைரவி சிறையிலிருந்து தப்பியவனுக்கு அடைக்கலம் தருகிறாள். இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். இதையறிந்த பைரவியின் உயிர்த்தோழி பொன்னருவி, தன் தேசப்பற்று மேலோங்க, எயினனை சிறைபிடிக்க தன் தந்தை மற்றும் மாமன் மகன் உதவியுடன் தக்க ஆயத்தங்கள் செய்கிறாள். அதையும் மீறி எயினனை தப்புவிக்கும் பைரவி, துரோகியென குற்றஞ்சாட்டப்படுகிறாள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என கனியன் பூங்குன்றனாரின் பாடலை வாழ்க்கையின் தத்துவமாக கொண்டு வாழும் பாடினி பைரவி, தனக்கு எந்த தேசத்தின் மீது பற்று இல்லையென்றும் அனைவரும் தனக்கு சமம் என்றும் வாதாடுபவள், பாண்டிய மன்னன் முன் பாட விழைகிறாள். நந்திபுர கோட்டையை அடைந்த பாண்டிய மன்னன் முன் பாடும் யாழ்நங்கை எயினனை பரிசாய் எப்படிப் பெறுகிறாள் என்பதும் தன் மீது சுமத்தப்பட்ட தேசதுரோக குற்றத்தை எப்படி பொய்யாக்குகிறாள் என்பதும்தான் மீதி கதை.

IMG_0034-195x311_0

யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் துணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லர் பேரி யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும இலமே. . .

ஆசிரியர்  கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் யாழினி பதிப்பகம், சென்னை / முதற் பதிப்பு
ஆண்டு 2013
விலை ரூ.55