அத்தையம்மா

“அம்மா போனதுக்கப்பறம் அப்பா வேற கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்துட்டார். அமுலுவுக்கும் எனக்கும் அத்தை தான் எல்லாம். 

“எல்லாம்ன்னா??? எல்லாம் தான்…

“அம்மா இல்லைங்கற குறை கொஞ்சம் கூட இல்லாம அஞ்சு வயசுல இருந்து எங்கள வளத்தவ… நான் காலேஜ் போற வயசு வர வரைக்கும், அப்பா ராத்திரி தினமும் ஏன் லேட்டா வரார்ன்னு என்கிட்ட சொல்லாம, அவரோட பிம்பம் உடையாம அவ அண்ணனோட கண்ணியம் காப்பாத்தினவ…

” ‘எம்புள்ளங்கள மாதிரி அண்ணன் பிள்ளங்களை பாத்துகிட்டேன்’னு ஒருதரம் கூட பேசினதில்ல., யாருகிட்டயும்… எப்பவும்… 

“அவ ஒரு தரம் கூட சொன்னதில்லதான்., ஆனா நிதம் வாழ்ந்திருந்தா… அதான் அத்த… எங்க அத்த…

“தம்புள்ளைங்க ‘அம்மா… அம்மா…’ன்னு கூப்டுட்டு, அவளை சுத்தி சுத்தி வரத பாத்து ஒருவேள எங்க மனசு கஷ்டபட்ற கூடாதுன்னு, வீட்ல இருந்த எல்லாறையுமே அவள அவ பேரச்சொல்லியே கூப்பிடவச்சவ… எங்க அத்த… 

“அது மட்டுமா? இன்னும் எவ்வளவோ இருக்கு… அவ செஞ்சதெல்லாம் சொன்னா நாளெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கலாம்…. 

“அதெல்லாத்தையும் தியாகம்ங்கற ஒத்த வார்த்தையில சுருக்கிட என் மனசு ஒப்பல… 

“எப்பவுமே சிரிச்ச முகத்தோட அன்பா மட்டுமே பாக்குற அத்தையோட அந்த கண்கள்., இன்னிக்கு ஒளியிழந்து போச்சு… இனிமே எழவே முடியாத தூக்கத்துக்கு போச்சு… ஒரு வாரம் ஐ.சி.யூ-ல தவிச்ச அத்தையோட உசிரு, என்னை பாக்காமலேயே போயிடுச்சு….

“எல்லாரும் அத்த செத்துட்டான்னு அழறாங்க… ஆனா நா மட்டும் அவள கொன்னுட்டேன்னு அழறேன்…. 

“நான் தான் அவள கொன்னுட்டேன்… இப்போ இல்ல… இன்னிக்கி இல்ல… பல வருஷத்துக்கு முன்னாடியே அவள நான் கொன்னுட்டேன்.

“அப்பா சொன்னத நம்பி… அப்பா சொன்னா சரிதான் வேற யாருகிட்ட சொல்லனும்ன்னு., அப்பா சம்மதம் மட்டும் போதும்ன்னு நான் நெனெச்சு., எல்லாமா இருந்த அத்தைக்கிட்ட கூட நான் பாரதிய விரும்பினத சொல்லாம… அவகிட்ட அத ரெண்டு வருஷம் மறைச்சு… மாலையும் கழுத்தும்மா அவ முன்னாடி, அப்பாவயும் சாட்சியா கூட்டிப்போய் நான் நின்னப்பவே., எப்பவும் சிரிக்கற அத்தையோட கண்ணுல கண்ணீர எட்டிப் பாத்தப்பவே., அதையும் மறச்சிட்டு எனக்கு ஆரத்தி எடுத்துட்டு என்ன கடந்து போறப்ப “என்கிட்ட ஒரு வார்த்த சொல்லனும்ன்னு தோனலைல உனக்கு”ன்னு என்ன கேக்காம கேட்டப்பவே அவள நான் கொன்னுட்டேன்.

“அன்னைக்கு சிரிப்ப நிறுத்துன அவளோட கண்கள், மறுபடி சிரிக்காமயே மூடிடிச்சு.

“அவ என்னை அன்னிக்கே மன்னிச்சுட்டா. ஆனா இன்னும் எத்தனை நாள் அழுது அழுது உருகினாலும் என்னைத்தான் என்னால மன்னிக்க முடியல. 

“அத்தை சாந்தியடைஞ்சிட்டா”.

சொல்லாத கதை

புரட்டாசி மாத காலை வேளை. முந்தைய நாள் இரவு பெய்த மழையின் ஈரம் இன்னும்  இருந்தது. அன்றைய நாள் ஆரம்பிக்கும் முன்பே வழக்கம் போல குளித்து முடித்து, உலர்த்திய தலைமுடியை பின்னி, வீட்டின் சாமி அலமாரியில் இருந்த படங்களை வணங்கி நெற்றியில் திருநீறு பூசிவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த பேரன்களை எழுப்பினாள் பாட்டி விசாலம்.

குளிரில் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கியவர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. ஈரத் துணிகளை முற்றத்தில் வைத்துவிட்டு, கோயிலுக்கு போய் வருவதாக வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூத்த மருமகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். தெரு முக்கில் திரும்பும் முன்பே கையில் ப்ரஷ்ஷுடன் அவளைத் தொடர்ந்து வந்தான்  பேரன் ராகவன். 

“என்னடா குட்டி குளிக்காம கொள்ளாம நீ பாட்டுக்கு என் பின்னாடி எங்க வர்ற?”

“நானும் உங்க கூட கோயிலுக்கு தான் வரேன்.”

“இப்போதான் பல்லே வௌக்குற. நேரம் ஆச்சுடி. நான் நாளைக்கு உன்ன கூப்டுட்டுப் போறேன். நாளைக்கு நேரமே எந்திரிச்சி குளிச்சிடு. நம்ம ரெண்டு பேரும் கோயிலுக்கு போலாம்.” 

“இல்ல அப்பாயி. நான் இன்னிக்கே உங்க கூட வரேன்…”, என்று அடம் பிடிக்கத் தொடங்கினான். இனியும் இவனுடன் போராடுவது உதவாது என்று தெரிந்து, ” குளிக்காம உன்ன கோயிலுக்குள்ள கூப்டுட்டு போக மாட்டேன். நான் விளக்கு போட்டுட்டு திரும்புற வரைக்கும் வெளியில தான் விட்டுட்டு போவேன். பத்திரமா இருக்கனும். சரியா?” என்றாள்.

“சரி அப்பாயி. நீங்க விளக்கு போட்டுட்டு வர வரைக்கும் நான் லாலா குளிக்கரத பாத்துட்டு இருக்கேன். நீங்க என்ன அங்க விட்டுட்டுப் போங்க.”

“அது என்ன இன்னும் லாலா லாலான்னு  சொல்ற? இப்போதான் யானைன்னு உனக்கு சொல்லத் தெரியும்ல?”, மழலை மாறாமல் இன்னும் யானையை அவன் லாலா என்று சொல்வதைப் பற்றி கேட்டாள் விசாலம்.

“லாலா தான் நல்லா இருக்கு. நான் அதயே சொல்றேன்”, என்றான் ராகவன்.

இருவரும் பேசிக்கொண்டே கும்பேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசல் அருகே வந்துவிட்டனர். செருப்பை கழற்றி வெளியே விட்டுவிட்டு உள்ளே சென்றனர். செங்கல் பதித்த அந்தத் தரையில் பாதி பெயர்ந்து, மீதி இருந்த செங்கல் காலில் குத்தியதைக் கூட பொருட்படுத்தாமல் யானை குளிப்பதைப் பார்க்க ஆர்வமாகப் போனான் ராகவன். 

உள்ளே நுழைந்ததுமிருந்த மண்டபத்திற்கு இடப்புறம், சட்டநாதர் சன்னதி அருகிலிருந்த மேடையில் அவனை உட்கார வைத்துவிட்டு, விளக்கு போட கோயிலுக்குள் சென்றாள் விசாலம்.. 

விளக்கு போட போனாலும், வெளியே விட்டு வந்த பேரனின் நினைவுதான் அவள் மனம் முழுதும் குடிகொண்டிருந்தது. அவசரஅவசரமாக கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டு, திருநீறையும் குங்குமத்தையும் பழைய காலண்டர் சீட்டில் மடித்துக்கொண்டு, வேகமாக சட்டநாதர் சன்னதிக்கு வந்தாள்.

திரும்பி வந்து பார்க்கும் போது அந்த மேடையில் ராகவனைக் காணாமல், “சிவ சிவா” என்று சொல்லிக்கொண்டே பதற்றதுடன் வன்னி மர விநாயகர் சன்னதி, யானை மண்டபம் என்று ஒவ்வொரு இடமாகத் தேடினாள். கொட்டிலில் யானையையும் காணாததால், யானையைத் தேடித்தான் ராகவன், எங்கோ போயிருப்பான் என்று தன்னைத்தானே சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு குளக்கரைக்கு சென்றாள். அங்கே கையில் ப்ரஷ்ஷுடன் யானை குளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொடிருந்தான் ராகவன். 

“உன்னதான் நான் அங்கயே இருக்க சொன்னேன்ல? அப்பறம் ஏன் இங்க வந்த? உன்ன காணோமேன்னு தவிச்சுப்போய்ட்டேன்டா”, என்றாள் விசாலம்..

“நீங்கதான லாலா பாத்துட்டு இருக்க சொன்னீங்க? அங்கயிருந்து இங்க லாலா குளிக்க வந்துச்சு. நானும் அது பின்னாடியே வந்துட்டேன்”, என்று சொல்லிச் சிரித்தான்.

“சரி சரி. வா போவலாம். காபி குடிச்சுட்டு வீட்டுக்கு போவ நேரம் சரியா இருக்கும்”, என்று அவனைக் கிளப்பினாள். 

“இல்ல இல்ல. இப்போ தான் லாலாவைக் குளிக்க வைக்க போறாங்க. நம்ம அத பாத்துட்டு அப்பறம் போவலாம். அதுவரைக்கும் நீங்களும் ரெஸ்ட் எடுங்க. என்ன ரொம்ப நேரம் தேடுனதுனால காலெல்லாம் வலிக்கும்ல…”, என்று செல்லமாக ஐஸ் வைத்தான்.

“எவ்ளோ நேரம்தான் இதையே பாப்ப? எனக்கும் போர் அடிக்கும்ல. இன்னிக்கி போகலாம், இன்னொரு நாள் அப்பா, அண்ணன் கூட வந்து பாரு”, என்று அவனை கிளப்ப முயன்றாள் விசாலம்.

“நான் இன்னும் ஒரு வாரத்துல லீவு முடிஞ்சு ஊருக்கு போய்டுவேன். அப்பறம் வர ரொம்ப நாள் ஆகும். நான் எப்போ மறுபடி லாலா பாப்பேன்? அங்க எங்க வீட்டுக்கிட்ட கோயிலும் இல்ல, லாலாவும் இல்லை…”, என்று அழத்துவங்கினான் ராகவன். 

“இதுக்கு ஏண்டி அழற? நம்ம யானை குளிக்கறத பாத்துட்டே போவலாம் சரியா. கண்ண தொடச்சிக்கோ”, என்று சொல்லி அவனைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள் விசாலம். 

“உங்களுக்கு போர் அடிக்காம இருக்க எனக்கு ஒரு கதை சொல்லுங்க, நான் கேட்டுக்கறேன். அதுக்குள்ள லாலாவும் குளிச்சிடும்.” 

“சரி இன்னிக்கி என்ன கதை சொல்லலாம்? இந்த கோயில் சாமி எப்படி இங்க வந்தாருன்னு கதை சொல்லவா?” 

“அதான் கோயில்ல உள்ள வரஞ்சிருப்பாங்களே. நம்பர் போட்டிருக்கும். நீங்களே எனக்கு நிறையவாட்டி சொல்லியிருக்கீங்க. அண்ணியும் எப்போ பார்த்தாலும் இந்த கதையத்தான் கோயிலுக்கு வரப்போலாம் எனக்கு திருப்பித் திருப்பி சொல்லுது”, என்று அலுத்துக்கொண்டான். 

“ஓ! உனக்கு நல்லா வாய் வந்துடுச்சு. கஜேந்திர மோட்சம் கதை சொல்லவா? நல்லாருக்கும். உனக்கும் ரொம்ப பிடிச்ச கதையாச்சே? குளத்துல வேற இருக்கோம். லாலா வரும்.”, என்று அவனை உற்சாகப்படுத்தப் பார்த்தாள். 

“அதும் எனக்கு நல்லாத் தெரியும். இதுவரைக்கும் நீங்க சொல்லாத வேற கதை சொல்லுங்க”, என்று மறுபடி கேள்வியை அவளிடமே திருப்பிவிட்டான் ராகவன். 

“பெரியபுராண கதையெல்லாம் நான் உனக்கு சொன்னதில்லை. சொன்னா உனக்கு புரியுமான்னு எனக்கு தெரியலடா குட்டி”. 

“அதெல்லாம் நீங்க சொன்னா புரியும் அப்பாயி. நீங்க சொல்லுங்க. புரியலன்னா நானே டௌட் கேப்பேன்”, என்று அவளை கதைச் சொல்லத் தூண்டினான் ராகவன்.

“எதையாவது சொல்லி நெனச்சத சாதிச்சிடு.”, என்று அவனை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு திருஷ்டி கழித்தாள். 

“உனக்கு புதுசா ஒரு கதை சொல்றேன். ஆனா யானை குளிக்கற வரைக்கும் தான் சொல்லுவேன். அப்பறம் வீட்டுக்குப் போகனும். நாளைக்கு கொலு ஆரம்பிக்குது. வீட்ல நிறைய வேலை கிடக்குது. அப்பாவும் அம்மாவும் பொம்மையெல்லாம் பரண்லயிருந்து எடுத்து தொடச்சு வச்சிருப்பாங்க. அத்தை, அண்ணி, மச்சான்லாம் வந்துருவாங்க. நம்மளும் போய் அவங்களுக்கு ஏதாவது ஒத்தாச பண்ணலாம்… சரியா…”, என்று கேட்டதும், “ஓகே. ஓகே அப்பாயி. லாலா குளிச்சதும் நாம காபி குடிச்சிட்டு உடனே வீட்டுக்கு போய்டலாம். நான் வேற ஏதும் கேக்கவே மாட்டேன்” என்று உத்தரவாதம் கொடுத்தான் ராகவன். 

அவனுக்காக பூசலார் புராணத்தை சொல்லத் தொடங்கினாள் விசாலம். 

“நம்ம ஊர் கும்பகோணம். நீங்க இருக்கறது தஞ்சாவூர். அதே மாதிரி திருநின்றவூர்னு ஒரு ஊர் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கு. அங்க பூசலார் நாயனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு.”

“நாயனார்ன்னா யாரு?”, கதையின் துவக்கத்திலேயே தனக்கு தெரியாததை தெளிந்துகொள்வதற்காகக் கேட்டான் ராகவன். 

“நாம தினமும் சிவன நம்ம சாமியா நெனச்சு கும்பிடுறோம்ல, அதே மாதிரி நாயன்மார்களும் சிவனையே எப்போதும் நினைச்சு, அவரோட புகழைப் பேசுவாங்க.  நீ பாடுவியே ‘தோடுடைய செவியன்..’. அது கூட ஒரு நாயன்மார் பாடினதுதான்.”

“ஆமா ஆமா அந்த பாட்டு எனக்கு தெரியும். அதை பாடினவர் பேரு திருஞானசம்பந்தர். குட்டி பாப்பாவா இருக்கறப்போவே சாமி அவருக்கு பால் கொடுத்தாங்க, அதான் அவர் நல்லா பாட்டு பாடினார். கரெக்டா?”, என்றான் ராகவன்.

“என் செல்லம். சரியா சொல்லிட்ட”, என்று கூறி அவனை மறுபடி ஒருமுறை அணைத்துக்கொண்டாள். 

“அவரு மாதிரிதான் இவரும், ஆனா இவர் வயசுல பெரியவர். சிவனுக்கும் சிவனடியாருக்கும் தொண்டு செய்றதை தன் வாழ்க்கை முழுசா செஞ்சிட்டு வந்தார். 

“நாம மனசுலயே நினைச்சு நினைச்சு கும்பிடுற சாமிக்கு பெருசா ஒரு கோயில் கட்டணும்னு அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்துச்சு”. 

“நம்ம கோயில் இருக்கே இவ்வளோ பெருசாவா?”, என்றான் ராகவன். 

“ஆமா. இதே மாதிரி பெரிய கோயில் கட்டணும்னு ஆசப்பட்டார். ஆனா அவர்கிட்ட அவளோ காசு இல்லை. எப்படி கட்டலாம்ன்னு மனசிலேயே ஒவ்வொன்னா கணக்கு பண்ணி சேத்து வெச்சார். கோயில் கட்ட எவ்வளோ கல் வேணும், எவ்வளோ மரம் தேவை, எத்தனை ஆள் வேணும், எவ்வளோ பணம் வேணும், குளம் எங்க வைக்கணும், கோபுரம் எங்க வைக்கணும், கலசம் எவ்வளோ உயரத்துல வைக்கணும், எங்க வாசல் கட்டணும், மரம் எங்க வைக்கணும், அப்படின்னு மனசிலேயே ஒரு கோயில் கட்டிட்டார், பூசலார் நாயனார். 

“இப்படி மனசிலேயே ஒவ்வொன்னா செஞ்சு கோயிலை கட்டி முடிச்சிட்டார் பூசலார். கோயில் கட்டினா உள்ள சாமிய வச்சு கும்பாபிஷேகம் பண்ணனும்ல, அதை எல்லா நாளும் பண்ணிட முடியாது. நல்ல நாள் பாத்துதான் பண்ணனும். அப்படி அவரே பார்த்து கும்பாபிஷேகத்துக்கு ஒரு நல்ல நாளை குறிச்சாரு. இது எல்லாமே அவர் மனசிலேயே நினைச்சுக்குட்டது தான். யார்கிட்டயும் சொல்லவே இல்லை.

“பூசலசார் நாயனார் திருநின்றவூர்ல கோயில் கட்ற மாதிரியே, அந்த நாட்டோட ராஜாவும் சிவனுக்காக பெரிய கோயில் ஒன்னைக் கட்டினார். கோயில் வேலை எல்லாம் முடிஞ்சு கும்பாபிஷேகம் பண்ணலாம்னு அரண்மனையில இருந்த  ஜோசியக்காரவககிட்ட பேசி முடிவு பண்ணி ஒரு நாள் குறிச்சார். அந்த நாளே கும்பாபிஷேகம் பண்றதா ஊர் முழுக்க தண்டோரா போடச் சொன்னார் அந்த ராஜா.

“அன்னிக்கி ராத்திரி ராஜாவோட கனவுல சிவன் வந்து, கோயில் கும்பாபிஷேகத்துக்காக நீ குறிச்ச நாள்ல என்னால வர முடியாது. பூசலார் எனக்காக கட்டின கோயிலுக்கு நான் போகணும். வேற ஒரு நாள் கும்பாபிஷேகத்தை வச்சுக்கோன்னு சொல்லிட்டு போயிட்டார்.

“ராஜாவுக்கு ஒரே குழப்பம். சாமிக்காக நம்ம இவ்வளவு செலவு பண்ணி, பெரிய கோயில் கட்டிருக்கோம், ஆனா அவரு வேற ஒருத்தர் கட்டுன கோயிலுக்கு போகணும்ன்னு சொல்றாறே, அப்படி என்ன அந்த கோயில் ஒசத்தி? எப்படி கட்டிருக்காருன்னு பாப்போம்ன்னு முடிவு பண்ணி ராஜா பூசலார் கட்டின கோயிலை பாக்கலாம்ன்னு திருநின்றவூருக்கு கிளம்பினார்.

“போற வழியெல்லாம் பூசலார் கட்டின கோயிலத் தேடிக்கிட்டே போனார். ஆனா யாருக்கும் அப்படி ஒரு கோயில் இருக்கறதே தெரியல. சரி, கோயில் தான் தெரியல, பூசலார்ன்னு யாரும் இருக்காங்களான்னு விசாரிச்சாரு ராஜா. இருக்காரு, அவர் ஒரு சிவனடியார்ன்னு சொல்லி, அவர் இருக்கற வீட்டை மக்கள் காமிச்சாங்க.

“பூசலார் வீட்டுக்கு ராஜா போனப்போ, அவர் பூஜைல இருந்தார். அவர் இருந்த வீடு ஒரு சின்ன குடிசையா இருந்துச்சு. இந்த வீட்ல இருக்கறவரு எப்படி கோயில் கட்டிருக்க முடியும்ன்னு ராஜா யோசிச்சு பார்த்தார். கொஞ்ச நேரத்துல வெளில வந்த பூசலார் கிட்ட அவர் கட்டின கோயில பத்தி கேட்டார். நீங்க சிவனுக்காக கோயில் கட்டியிருக்கிங்களா? எங்க கட்டியிருக்கிங்க? இன்னிக்குதான் கும்பாபிஷேகம் நடத்துனீங்களா? அப்படின்னு நிறையா கேள்வி கேட்டார்.

“ஆமாம்., நான் சிவனுக்கு கோயில் கட்டினது உண்மைதான். இன்னிக்கு தான் கும்பாபிஷேகம் பண்ணேன்னு சொன்னாரு. 

“எங்க அந்த கோயில்? நான் இப்போவே பாக்கனுமேன்னு ராஜா கேட்டாரு. அது யாராலையும் பாக்கமுடியாது ராஜா. நான் கட்டினது என் மனசுல. என்னைத் தவிர யாரும் பாக்க முடியாதுன்னு பூசலார் சொன்னதும் ராஜாவுக்கு ஒரே ஆச்சர்யம். அவர் கனவுல சிவன் வந்தது பத்தி பூசலார்கிட்ட சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இறைவனே தன்னைப் பத்தியும் தன் பக்தியைப் பத்தியும் ராஜாகிட்ட சொன்னதை நினைச்சு அவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ராஜாவே வந்ததால, பூசலாரோட சிவபக்தியும் தொண்டும்  ஊர்முழுக்க தெரிஞ்சது. அவர் தொடர்ந்து சிவனுக்கு தொண்டு செஞ்சி முக்தி அடைஞ்சாரு”.

விசாலம் கதையை சொல்லி முடிக்கும் வரை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ராகவன்.

“அப்படின்னா எல்லாரும் மனசிலேயே கோயில் கட்டலாம்ல? ஏன் இவ்ளோ பெரிசா கோயில்லாம் கட்டினாங்க?”, என கேள்வி கேட்டான்.

“என் செல்லக்குட்டி. தங்கம். எவ்ளோ அறிவா கேள்வி கேக்குது”, என்று பேரனை நினைத்து பெருமையுடன் உச்சிமுகர்ந்த விசாலம், “அப்படி இல்லடா குட்டி. பூசலார்கிட்ட காசு சுத்தமா இல்ல, ஆனா ராஜா கிட்ட நிறைய இருந்துச்சு. ரெண்டு பேருமே கோயில் கட்டுனாங்க. ராஜா கட்டுனது காசு இருந்ததால எல்லார் கண்ணுக்கும் தெரிஞ்சது. பூசலார் கட்டுனது அவருக்கு மட்டும் தான் தெரிஞ்சது. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே பலன் தான் கிடைச்சது, ஏன்னா ரெண்டு பேரும் சாமி மேல வச்சிருந்த பக்தி உண்மையா இருந்திச்சி. அதனால ரெண்டு பேத்துக்கும் ஒரே பலன் கிடைச்சது. இந்த கதைலேர்ந்து என்ன தெரியுதுன்னா, நம்ம எல்லாராலையும் பணம் செலவு பண்ணி கோயில் கட்ட முடியாது. சில பேர்கிட்ட கோயிலுக்கு போக கூட காசு இருக்காது. அப்படி இருந்தாலும், அவங்க மனசால நினைச்சாலே போதும், கோயில் கட்டுன பலன், கோயிலுக்கு போன பலன் கிடைச்சிடும்ன்னு சொல்றாங்க.  புரியுதா?” என்று விளக்கினாள்.

“சரி சரி. அப்படின்னா நானும் ஒரு நாள் சாமிக்காக கோயில் கட்டுவேன். பூசலார் மாதிரி. லாலா குளிச்சிடுச்சி, நம்ம வீட்டுக்குப் போய் கொலு வைக்கிற வேலைய பாக்கலாமா?” என்று கிளம்பினான் ராகவன்.

“வா காபி குடிச்சுட்டு போவலாம்.” இருவரும் குளக்கரையிலிருந்து எழுந்து மெல்ல ஹோட்டலுக்கு சென்றனர்.

“அப்பா… அப்பா… வாங்கப்ப போவலாம். இன்னும் எவளோ நேரம் தான் இங்கேயே உக்காந்துருப்பீங்க?”,  சட்டநாதர் சன்னதி அருகிலிருக்கும் மேடையில் உட்கார்ந்து கொலுவுக்காக போட்ட கடைகளையும், அங்கிருந்த ராட்டினங்களையும் பார்த்துக்கொண்டே பழைய நிகழ்வுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தவன்,  மகளின் கேள்விகளால் நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்குத் திரும்பினான்.

“இன்னும் கொஞ்ச நேரம்தான். போயிடலாம்.”, என்றான் ராகவன். 

“ஏன்பா! ஒவ்வொரு வருஷமும் கொலு பாக்க மட்டும் தான் இந்த ஊருக்கு வர்றோம். ஏன் நம்ப ஊர்லயெல்லாம் இந்தமாதிரி கோயில்ல கொலு இருக்காதா? இல்லனா நம்ப வீட்லையே ஒரு கொலு செச்சுடலாம்ல?”, என்றாள் ராகவனின் மகள். 

கால ஓட்டத்தில், கொலு வைக்கும் பழக்கம், வீடு, சொந்தங்கள் என்று எல்லாமும் மாறிவிட்டிருந்தன. ஆனால் கொலு வைக்கும் ஆசை மட்டும் அவனை விட்டு என்றுமே போகவில்லை. பொம்மைகள், திருவிழாக் கடைகள், ஒவ்வொரு நாளும் இரவு கோயிலுக்கு செல்வது, பள்ளி விடுமுறை, அத்தை வீடு, அண்ணி, மச்சான், சுண்டல், காலை கோயிலுக்கு யானை குளியல் பார்க்கச் சென்றது என்று எல்லாம் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன. 

எவ்வளவோ ஆசைப்பட்டும், பல வருடங்கள் முயன்றும், மறுபடி அவனால் அவனது வீட்டில் கொலு வைக்கமுடியவில்லை. எஞ்சியிருந்த ஏக்கத்தோடு, “அதெல்லாம் நடக்கலன்னு தான்டா நான் வருஷா வருஷம் நம்ம கோயிலுக்காவது வந்து கொலு பாக்கலாம்னு வரேன்!”, என்றவன் கண்கள் குளமாயின.

“அச்சோ.. இதுக்கு எதுக்குப்பா அழுவுறீங்க? நீங்க தானே எனக்கு பூசலார் நாயனார் கதை சொன்னீங்க – மனசால நினைச்சதாலேயே, பூசலாருக்கு கோயில் கட்டுன பலன் கிடைச்சிடுச்சுன்னு? அதே மாதிரிதான நீங்களும் ஒவ்வொரு வருஷமும் மனசுல கொலு வைக்கரீங்க.! அப்படினா நீங்க கொலுவச்ச மாதிரிதானேப்பா? வேறுயாரு பாக்க முடியலனாலும். அந்த பலன் உண்டுப்பா…”, அவனது மகள் விசாலம் சொல்லச் சொல்ல, அவன் அப்பாயியே மறுபடி அவனுக்கு சொல்வது போல இருந்தது.

“நீ சொன்னா சரியா தான்டா இருக்கும். இனிமே இதுக்காக அப்பா வருத்தப்படவே மாட்டேன்.”, என்றவன் மகளை அணைத்துக்கொண்டான். 

இருவரும் கோயிலிலிருந்து கிளம்பிய போது  கும்பேஸ்வரர் கோயில் யானை கொட்டிலுக்கு திரும்பிக்கொண்டிருந்தது.