எங்கே பிராமணன்? : சோ

நம்மை ஆட்டுவிக்கும் காரணிகளுள் முக்கியமானது சமூகம். அதிலொரு இடம் பிடிக்கவோ அதனுள் பொருந்துவதற்காகவோ மனிதர்களாகிய நாம் பல செயல்களை அறிந்தோ அறியாமலோ செய்து வருகிறோம். அதிலொன்றுதான் ஜாதி, இன அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்தி முன்னிறுத்திக்கொள்வது. சமூகத்தில் சில சலுகைகளை பெறுவதற்காகவோ மற்றவர்க்கு அதை நிராகரிப்பதற்காகவோ, ஒருவர் மீது ஆளுமையை  செலுத்துவதற்காகவோ, அதிலிருந்து விலக்கு பெறுவதற்காகவோ ஏதோ ஒரு சூழலில் நம் அடையாளமாக ஜாதியையோ, மதத்தையோ, மனிதத்தைத் தாண்டி முதன்மைப்படுத்திக்கொண்டு அதனைக் காக்க பல தலைமுறைகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த சில நூற்றாண்டுகளில் வெளிப்படையாக இந்த அடையாளங்களை காட்டிக்கொள்ளும் அளவு சிறிது குறைந்திருந்தாலும், ஆழ்மனதில் ஏதோ ஒரு மூலையில் ஜாதிய அடையாளத்தை அதன் உண்மைப்பொருளையோ, அப்பகுப்பிற்கான காரணங்களையோ விளங்கிக்கொள்ளாமல் பிடித்துக்கொண்டு அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் தனக்குச் சாதகமான சூழல்களிலும், சமூகப்பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் போதும் அதை வெளிப்படுத்துவதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

இப்படி சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதற்காக பலர் மேற்கோளாக இந்து மத வேதங்களைக் குறிப்பிடுகின்றனர். அதை அவர்கள் படித்துதான் கூறுகிறார்களோ,  கற்றோர் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனரோ என்பது அந்த வேதநாயகனுக்கே வெளிச்சம். தங்களது சுய லாபத்திற்காக இவ்வாறு வேதங்களை பயன்படுத்திக்கொள்வோரின் அறியாமையை அழகாய் படம் பிடித்து காட்டியிருக்கிறது சோ அவர்களின் எங்கே பிராமணன்?

அடிமை வாழ்வில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, மேல் நாட்டிலிருந்து என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வது என்ற நிலை உருவாகிவிட்டது. திருவள்ளுவருக்கு இங்கே செல்வாக்கு தேட, ‘அயல் நாட்டினரே கூட பாராட்டுகிறார்கள் பாருங்கள்’ என்று கூற வேண்டிய நிலையும் வந்தது.

மேற்கத்திய நாடுகளில் டாவின்சி தனது கற்பனைகளை ஓவியங்களாக தீட்டிவிட்டு மறைந்துள்ளார். அதில் பாராசூட் போலவும், விமானம் போலவும் பல உருவங்களை வரைந்துள்ளார். அவை கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாக வெளிவந்துள்ளன. இதனால் அவரை தீர்க்கதரிசி என்று அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதனால் நாமும் கொண்டாடுகிறோம். ஆனால் ராமாயண மகாபாரத காவியங்களில் வரும் புஷ்பக விமானத்தையும் பிரம்மாஸ்திரத்தையும் பிதற்றல், முட்டாள்தனம் மூட நம்பிக்கை என்று நாமே எள்ளி நகையாடுகிறோம். ஆசிரியரின் சொற்களில் சொல்ல வேண்டுமானால்,

நமது முன்னோர்களின் அறிவு தீட்சண்யத்தை நினைத்துப் பெருமைப்படும் சுயமரியாதை கூட, நம்மிடம் இல்லாமல் போய்விட்டது.

தொழிலதிபர் நாதன், அவரது மனைவி வசுமதி. இவர்களின் மகன் அசோக். பாகவதர், சிங்காரம், வையாபுரி, ராமசாமி, எட்ரிச், ஹிக்கின்ஸ், உமா, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், நாரதர், சிவபெருமான், பார்வதி, மிஸ்டர்,  மிஸஸ் ராய் என்று சில கதாபாத்திரங்களைக் கொண்டு இந்து மதத்தின் பெயர்க் காரணம், வேதம், ஸ்மிரிதி, உபநிஷத்துகள், புராண இதிகாசங்கள், அவற்றிலுள்ள சமூகப் பாகுபாடுகள், அதற்கான காரணங்கள், சமூக பாகுபாடுகள் ஜாதிகளாக மாறியது, சடங்குகளுக்கும் மந்திரங்களுக்குமான உண்மை அர்த்தங்கள் என பலவற்றை கதாபாத்திரமான அசோக்கின் வாதங்களாக முன்வைக்கிறார்.

இப்போது நான், இந்த என்னுடைய முயற்சியில் நான் படித்த, கேட்டுத் தெரிந்து கொண்ட, ஓரளவு யோசித்து முடிவு செய்த, சில விஷயங்களைக் கூறும் போது அவற்றை ஏற்பதும் ஏற்காததும் வாசகர்களின் இஷ்டம்.

நாரதர் பூலோகத்தில் நடந்த பிராமண மாநாடு பற்றி கயிலையில் பேசிக்கொண்டிருக்கையில் யார் பிராமணன் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கான தீர்வை தானே கூறாத இறைவன், உலகில் உள்ளோர் அனைவருக்கும் இதன் பதில் தெரிய வேண்டும் என்று ஒரு வழி சொல்கிறார். அதன் படி வசிஷ்டர் அசோக்காக பூமியில் பிறந்து பிராமணன் யார் என்று விளக்கம் அளிப்பதற்காக தன் அறிவை வளர்த்துக்கொண்டு, பிராமணன் ஒருவனை சந்திக்கும் போதுதான் சுய நிலை அடைந்து கயிலாயம் திரும்புவார் என்று கூறி அனுப்பிவைக்கிறார்.

 மந்திரங்களின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாமல் உபதேசம் செய்தால், அது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போலத் தான்

மனிதனின் குணங்கள் தான் அன்றைய சமூக அமைப்பில் அவன் நிலையை உறுதி செய்ததாகவும், பிறப்பால் அல்ல என்றும், ஆனால் இக்காலகட்டத்தில் டாக்டர் மகன் டாக்டர், வக்கீல் மகன் வக்கீல் என்று ஆவது போல அன்றைய காலகட்டத்தில் குணங்களால் பகுக்கப்பட்ட சமூக அமைப்பு காலப்போக்கில் பிறப்பால் மாற்றப்பட்டதையும் அழகாக ஆதாரங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். அவர் கருத்துக்களை எடுத்துரைப்பதாக சிங்காரத்தின் பாத்திரம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தம்.

ஞானமின்றி உபநயனம் செய்து வைப்பவனும், உபநயனத்தால் ஞானத்தை நாடாதவனும், இருளிலிருந்து இருளிலேயே புகுவார்கள்.

நீலகண்டன் பாகவதர் இடையேயான வாதங்கள், ஹிக்கின்ஸ் மற்றும் எட்ரிச்சின் கேள்விகள் மூலம், இந்து மதத்திற்கான பெயர்க் காரணம், இந்து மதச் சடங்குகள் செய்வதன் பின்னணி, வர்ணாசிரமத்தின் பகுப்புகள், இந்து மதத்தில் பல கடவுள்கள் இருப்பதற்கான காரணம், பிரம்மோபதேசத்தின் அர்த்தம், இராமாயணம் மகாபாரதம் நடந்த காலம் என பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி, அவை இக்கால கட்டத்தில் எப்படி மாறிவிட்டது என்பதையும் விளக்குகிறார் ஆசிரியர்.

சினிமா தியேட்டருக்குள்ளே போற போது, படம் எப்போ முடியும்னு கேக்கறாளோ என்னவோ தெரியாது! சாஸ்திரிகள் வீட்டுக்குள்ளே நுழையும் போதே எப்ப வெளியே போவீங்கோனு கேக்கற மாதிரி, எத்தனை மணிக்கு முடியும்னு கேக்கறா!

வெளிநாட்டவரான ஹிக்கின்ஸ், எட்ரிச் இந்து மத பழக்க வழக்கங்கள், நூல்களில் காட்டும் ஆர்வமும் அவர்களின் தேடலும் நாம் எவற்றை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

சிவபெருமான், பிரம்மரிஷியான விஸ்வாமித்திரரை விடுத்து வசிஷ்டரை ஏன் பூலோகம் அனுப்பினார்? அசோக்காக பூலோகம் சென்ற வசிஷ்டர் பிராமணனை சந்தித்தாரா இல்லையா? யார் பிராமணன் என்ற கேள்விக்கு விடையளித்தாரா இல்லையா? அவர் கயிலாயம் திரும்பினாரா இல்லையா ? இதற்கெல்லாம் விடைதான் எங்கே பிராமணன்?

கே. பாலசந்தர், சோ போன்றோரின் படைப்புகள் காலங்கடந்து நிற்கும் என்றும், எக்காலத்துக்கும் பொருந்தும் என்றும் என் தந்தை கூறுவார், அதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்பதை வாசிப்பில் உணர்ந்தேன்.

ஆசிரியர் சோ
பதிப்பகம் அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை
ஆண்டு 2014 (19ஆம் பதிப்பு)
பக்கங்கள் 440
விலை ரூ.200

bram
Enter a caption