சில நேரங்களில் சில மனிதர்கள்

அன்னிக்கு சனிக்கிழமை. நான் என்ன புக் படிக்கலாம்ன்னு யோசிச்சிண்டிருந்தேன். எங்க ஆத்து லைபரிலே இருந்த ஒரு புக்கை பாக்கரேன், இந்த பேரு நான் அவள் ஒரு தொடர்கதை படத்திலே பாத்திருக்கேனே. எல்லாரும் நல்ல புக்குனு சொல்லுவா? அப்படி என்னதான் இதிலே இருக்குனு பாத்துடனும்னு நான் நெனச்சுக்கறேன்.

இப்படித்தான் ஜெயகாந்தனின் கங்காவாக நான் இருந்தால் நினைத்திருப்பேன்.

இந்த நடை தான் என்னை மிகவும் கவர்ந்தது. எப்போதும் வரலாற்றுப் புதினங்களாகவே படித்த எனக்கு இதில் ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் நாவலின் நடையே. நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒரு நாள், ஒரு மணியாவது கங்காவின் குணங்களோடோ, எண்ணங்களோடோ வாழ்ந்திருப்போம். பிடித்தவரை வெறுத்ததுமாக, வெறுத்தவரை பிடித்ததுமாக வாழ்ந்திருப்போம். பிறரை கோபப்படுத்துவதற்காகவோ, அல்லது அவர் சொல்வதை எதிர்மறையாக்கவோ, வேண்டுமென்றே சில காரியங்களை செய்திருப்போம். அதுதான் சாமான்ய மனிதனின் இயல்பு. அதற்கு ஜெயகாந்தன் தந்த வடிவம் தான் கங்கா.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலானாலும், இக்காலத்துக்கும் பொருந்தும் ஒரு கதையாக அமைந்துள்ளது. கே.பாலச்சந்தரின் நாயகிகளின் கலவையாக கங்கா காட்சியளிக்கிறாள். சில நேரங்களில், அவள் ஒரு தொடர்கதை கவிதாவாகவும், சில நேரங்களில் அரங்கேற்றம் லலிதாவாகவும்.

கணகம், கணேசன், பிராகரன், ஆர் கே வி, வெங்கட்ராமய்யர், மஞ்சு, பத்மா என இந்நாவலில் வரும் அனைவருமே நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனித்ர்கள்தான். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ ‘ஜட்ஜ்’ செய்யாமலிருப்பதே இந்தக் கதையின் வெற்றி.

நான் எதிர்பார்த்த முடிவு புத்தகத்தில் இல்லை. அந்நிலையில் எனக்கு ஒரு ஏமாற்றமே. இருந்தாலும், அனைவரின் வாழ்க்கையும் ‘சுபம்’ என்ற அத்தியாத்தோடு முடிவதில்லை என்ற படிப்பினையைத் தந்தது இந்நாவல்.  இதைத்தான் காலங்கடந்தும் பேசப்படுபவன் என்கின்றார்களோ?

index.jpg

ஆசிரியர் ஜெயகாந்தன்
விலை.
ரூ.340
பக்கங்கள்
374
பதிப்பகம் / ஆண்டு காலச்சுவடு / 2014

Advertisements