மறுவாழ்வு

“உங்கள் தீமையை என் நன்மையைக் கொண்டு வென்றேன். ஒவ்வொரு  முறையும். வாய்ப்புகள் பல வழங்கியும், அதை பயன்படுத்திக்கொள்ளாத உங்களது தீமையை என் நன்மை கொண்டு பலமுறை என்னையே வருத்திக்கொண்டும் வென்றேன்.

“காடுகளை அழித்து, நீர்த்தேக்கங்களை களவாடி மாட மாளிகைகள், விண்முட்டும் கோபுரங்கள் கட்டி, என் வளங்களை கொள்ளை அடித்து, நிலத்தை மலடாக்கி, சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி என் உடலின் ஒவ்வொரு துகளையும் சீரழித்தீர்கள். சகித்தேன். பொறுமை காத்தேன். பூமித்தாயல்லவா நான்.? தன் மக்களின் குறையை, தீமையை சரி செய்பவள் தானே தாய்? ஒரு கடைசி வாய்ப்பு இப்போது உங்களுக்குத் தருகிறேன், என்னையே அழித்துக்கொண்டு, என் சகோதரி, செவ்வாயிடம் என் ரகசியங்களைத் தந்து, நீங்கள் வாழ பிராணவாயுவும், நன்னீரையும் பெருக்கும் வழியைச் சொல்லி, என் மக்களாகிய உங்களை அவளிடம் அனுப்புகிறேன். சென்று நல்வாழ்வு வாழுங்கள்….” , பூமித்தாய் தன் கடைசி வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கையில், கடைசி விண்கலமும் செவ்வாய் அடைந்திருந்தது.

 

குறிப்பு: Momspresso Tamil நடத்திய போட்டிக்கான பதிவு.

 

No automatic alt text available.

நான் காதலில் விழுந்த அந்த நாள் – தெரியாது

Image may contain: textநான் காதலில் விழுந்த அந்த நாள் – தெரியாது.
அவளை முதன் முதலாக நான் பார்த்த போதா? தெரியாது.
அவள் பெயரை முதல் முறை கேட்ட போதா ? தெரியாது
அவள், என்னை பெயர் சொல்லி அழைத்த போதா ? தெரியாது.
அவளுடன் சென்ற முதல் பயணத்திலா? தெரியாது.
என் வாழ்க்கைத் துணையாக மாற அவள் சம்மதித்த போதா ? தெரியாது.
என் வீட்டிற்கு வருவதற்கு அவள் பெற்றோரும் என் பெற்றோரும் சம்மதித்த போதா ? தெரியாது.

இது என்றுமே விடைகாண முடியாத வினா. சினிமாவிலும், கதைகளிலும் வருவதைப் போல, துரத்தி துரத்திச் சென்று சொன்ன காதல் அல்ல. விழிகளில் விழுந்து மனங்களில் தொலைந்த காதல் அல்ல. இது இருவரும் ஆத்மார்த்தமாக உணர்ந்த உணர்வு. என்றோ நிச்சயிக்கப்பட்ட உறவு.

Momspresso Tamil FB பக்கத்தில் தேர்வாகி வெளியான #100வார்த்தைகதை பதிவு.