கொன்றை மலர் குமரி

சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு பொன்வேய்ந்த பராந்தக சோழனின் இரண்டாம் மகனான கண்டராதித்த  சோழனின் காலப்பின்னணியில் அமைந்தது கொன்றை மலர் குமரியின் கதைக்களம். பராந்தக சோழனின் மூத்த மகனான ராஜாதித்யன் தக்கோலப் போரில் மரணமடைந்த காரணத்தால், பராந்தக சோழனின் மறைவிற்கு பிறகு கண்டராதித்த சோழன் அரியணை ஏறுகிறார். போரிலும், நாட்டின் எல்லைகளையும் விரிவாக்கும் எண்ணத்தைவிட சிவத்தொண்டிலும் பொன்னம்பலத்திலும் காலங்கழிப்பதையே அவர் விரும்புகிறார்.

சோழர்களிடம் எப்போதுமே பகைமை பாராட்டும் இராட்டிரகூடர்கள் சோழ நாட்டை ஆக்கிரமிக்கவும், சோழ தேசத்தை தங்கள் நாட்டுடன் இணைக்கவும் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தனர். படைபலத்தால் வெல்வதைவிட சூழ்ச்சியால் சோழரை முறியடிக்க முயல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, உதயன், மதுவணன் ஆகிய இராட்டிரகூட ஒற்றர்கள் மலர்மங்கை என்ற ஆதரவற்ற பெண்னொருத்தியை சிதம்பரத்தில் தங்க வைத்து, சைவ திருமுறைகளை பொன்னம்பலத்தில் பாடும் கூத்தன் என்ற இளைஞனிடம் தமிழும் இசையும் கற்க வைக்கின்றனர். இந்த சூழ்ச்சிகளை அறியா அப்பெண்ணும் அம்பலவானனிடம் பற்று கொண்டு, அவனருளாலே தமிழும் இசையும் கற்கிறாள். கூத்தனின் முயற்சியால் மலர்மங்கை மன்னர் முன் தேவாரம் பாடுகிறாள். அவளது தெய்வத்தமிழிலே மனம் இழக்கும் மன்னர், சிவபக்தியில் திழைத்த கருவுற்றுள்ள தன் மனைவியான செம்பியன்மாதேவியுடன் இருக்கவும், அவளுக்காக தேவாரப் பாடல்கள் பாடவும் அவளை தஞ்சைக்கு அழைக்கிறார். தஞ்சைக்கு செல்லும் மலர்மங்கை  சோழர்களை சதியினால் வீழ்த்தினாளா இல்லையா என்பது தான் இதன் கதை.

166104_Rs.55

ஆசிரியர் விக்கிரமன்
பதிப்பகம் முற்றம், சென்னை (முதற் பதிப்பு 2008)
பக்கங்கள் 128

குன்றிமணி

தமிழகத்தின் தலைசிறந்த குலங்களான சோழ, சேர, பாண்டியர் வலுவிழந்த வேளையிலே விஜயநகர பேரரசின் கீழ் தமிழகத்தை நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தனர். மதுரையிலிருந்து திருமலை நாயக்கர் ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழகக் கோயில்கள் பலவற்றிற்கு விண்ணுயர கோபுரங்கள் கட்டப்பட்ட காலம். அந்த காலப்பின்னணியில் சுசீந்திரம் கோயிலில் சுற்றுச்சுவரும் மண்டபமும் கட்டப்பட்டது தொடர்பான கதைதான் குன்றிமணி.

கோயில் மண்டபத்தில், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மூவரின் தலையை யானை இடருவது போல அமைந்துள்ள ஒரு சிற்பம்தான் இந்தக் கதையின் கரு.

வடக்கிலிருந்து வரும் துருக்கர்கள் மதுரையைத் தாக்கும் சூழல் எழுமானால் அதனை எதிர்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் ஒரு பாதுகாப்பான கோட்டை தேவைப்பட்டதை உணர்ந்தார் மதுரையிலிருந்த திருமலை நாயக்கர்.  அதற்காக  சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயிலின் சுற்றுச்சுவரை பெரிய மதிலாக்கவும் அங்கே ஒரு பெரிய மண்டபம் அமைக்கவும் பெருமளவு செல்வத்தை தன் மைத்துனரும், தளபதியுமான ஜெயந்தியப்ப நாயக்கரிடம் தந்து சோழ நாட்டுச் சிற்பிகளைக் கொண்டு திருப்பணி நடத்துமாறு பணிக்கிறார். என்றும் தன் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட மன்னர், அந்த கோயில் மண்டபத்தில் தன் சிற்பத்தை செதுக்கவும் வேண்டுகிறார்.

கோயில் திருப்பணிக்காக, சோழ நாட்டிலிருந்து சரபன், சடையர், சதாசிவன் ஆகிய சிற்பிகள் சுசீநதிரம் வருகின்றனர். மன்னரின் சிலையை வடிப்பதற்காக கொளஞ்சி என்ற சித்திரக்காரன், மன்னரை பல கோணங்களில் ஓவியம் வரைந்து வருகிறான். கோயில் வேலை நல்ல முறையில் நடைபெறுகிறது. முதற்கட்ட வேலைகள் முடிந்தவுடன் சடையரும், கொளஞ்சியும் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

திருமலைநாயக்கர் சிலை, மிகவும் அழகாக அமைந்துள்ளதை கண்ட ஜெயந்தியப்ப நாயக்கருக்கு தன் சிலையையும் அங்கு அமைக்கும் எண்ணம் உண்டாகிறது. சதாசிவத்திடம் சிற்பம் செதுக்கும் போது உண்டாகும் மண்ணின் அளவுக்கு ஏற்ப பொன் தரப்படும் என்று கூறிச் செல்கிறார். பெண்ணாசையினாலும் பொன்னாசையினாலும் சதாசிவன் தளபதியை ஏமாற்றுகிறான். இதையறிந்த தளபதி அவனையும் அவனது இரண்டு உதவியாளரையும் சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிடுகிறார்.

2star

ஆசிரியர் பாலகுமாரன்
பதிப்பகம் திருமகள் நிலையம் , சென்னை
ஆண்டு 2010 இரண்டாம் பதிப்பு
பக்கங்கள் 240
விலை ரூ.90