காத்திருப்பின் முடிவு

நம் அனைவருக்கும்… நமக்கு முன் இருந்தவர்க்கும், நமக்குப் பின் வருவோருக்கும் பொதுவான தவிர்க்க முடியாத ஒன்று – மரணம்.! 

நம்மிலிருந்து, நமக்கு பிடித்தவரை, நம்மைவிட்டு நிரந்தரமாய் பிரித்துவிடுவது மரணம்.

ஆனால், நாம் அந்த மரணத்தை எப்போதும் பிரிவாக மட்டுமே பார்க்கிறோம். நாம் அனைவரும் வெறுக்கும், ஏற்க மறுக்கும், தப்பிக்க முடியாத மரணத்திற்கு இந்த ஒரு பரிமாணம் மட்டும் தானா? நாம் பார்க்க மறுக்கும், பார்க்க மறந்த வேறு பரிமாணம் உண்டா? 

இந்த திடீர் கேள்வி ஏன்? இந்த உணர்தல் ஏன்? எல்லாம் ஒரு மரணம் சொல்லித்தந்த பாடம் தான். அம்மாவைத் தவிர அதிக நேரம் நான் பேசி, என்னுடன் பேசிய இரு பெண்மணிகளின் மரணம். அடுத்தடுத்த மூன்று மாதங்களில். . . முதலில் ஆச்சி (அம்மாவின் அம்மா)  தில்லையம்மாள். அடுத்து அப்பாயி (அப்பாவின் அம்மா) தர்மாம்பாள்.

2017 டிசம்பர் 31, இனி என்றுமே புது வருடப் பிறப்பை வெறும் புது வருடமாக இல்லாமல் மாற்றிவிட்ட நாள். உடல் நலக்குறைவால் ஆச்சி இறந்த நாள். சென்னையிலிருந்து தஞ்சை செல்லும் வழியெல்லாம், அவர் சொன்ன கதைகள், இனி கேட்க முடியாத கதைகள் பற்றிய ஏக்கம், எல்லாம் துக்கமாக அழுதுகொண்டே முடிந்த பயணம்.

“ஆம்பளப்புள்ளை அழலாமா ?”

“நீ அழுதா மட்டும் போனவங்க திரும்பி வரவாப் போறாங்க?” இப்படி பல (நியாயமான?) கேள்விகள்.

மௌனமும் கண்ணீர் மட்டுமே நான் தந்த பதில்கள்.

இன்றுடன் எப்படியோ இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. பிரிவின் துயரம், இழப்பின் ஏக்கம் குறைந்ததா? காலம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

வீட்டில் பாட்டிகள் கதை சொல்வது என்ன பெரிய விஷயமா ? எல்லா பாட்டிகளும் தான் கதை சொல்வார்கள் என்று நாம் நினைக்கலாம். எனக்குக் கதை சொல்லி வளர்த்த இரு பெருமாட்டிகளும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தவர்கள். ஆச்சி சொன்ன கதைகள் அனுபவம் குடும்பம் சார்ந்து இருக்கும். அப்பாயி சொன்ன கதைகள் புராண இதிகாச நீதிக் கதைகளாய் இருக்கும். வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத, எனை நெறிப்படுத்தி எனையும் கதை எழுதவும் வைத்த கதைகள். 

சில நாட்களுக்கு முன்பு தான் ஆச்சி சொன்ன கதைகளை அசைப்போட்டுக்கொண்டிருக்கையில் தான் ஆச்சியின் மரணம் பிரிவு அல்ல அது ஆச்சியின் பல ஆண்டு கால காத்திருப்பின் முடிவு என்று உணர்ந்தேன். 

எப்போதும் ஆச்சி சொல்லும் கதைகள் குடும்பத்தை மையமாகக் கொண்டேயிருக்கும். அவருடைய குழந்தைப் பருவம், பள்ளி, அவருடைய திருமணம், தாத்தா வீட்டு சொந்தங்கள், அவருடைய குழந்தைகளின் (என் அம்மா மற்றும் உடன் பிறந்தோர்) சிறு வயதுக் கதைகள், தாத்தாவின் கடை, மாமாக்களின் உழைப்பு, பெரியம்மா அம்மா சித்தி ஆகியோரின் பள்ளி அனுபவங்கள், திருமணம் நடந்த கதைகள், அத்தைகளின் அனுசரித்தல் அம்மாவின் பிரசவம் (நாங்கள் பிறந்த கதை) என்று எல்லாமே குடும்பத்தை மையப்படுத்தியே இருக்கும். எல்லாவற்றையும் ஒரு தெர்ட் பெர்சன் பெர்ஸ்ப்பெக்டிவ்வில் நிதானமாக சொல்வார். இதில் அதிகம் ஆச்சியிடம் அதிசயித்தது, கணவர், மகன்/மருமகன்கள், மகள்/மருமகள்கள், மாமியார் என்று யாரைப் பற்றியும் குறையாகவோ எதிர்மறையாகவோ கூறியதில்லை. 

ஆனால் ஆச்சி உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் ஒரே கதை எங்கள் செல்வராசு மாமா (ஆச்சியின் 6ஆவது பிள்ளை) பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலக்குறைவால் இறந்ததைப் பற்றி சொல்லும் கதை தான்.

அதை ஒவ்வொரு முறையும் சொல்லும் போது, கண்கள் கலங்கி ஆனால் கண்ணீர் வராமல் சொல்லி முடிக்கும் ஆச்சியின்  தொண்டையை அடைந்துக்கொண்டு வரும் குரல் சொன்னதை விட வெளியில் வராத கண்ணீர் சொன்ன கதைகள் இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது.

மாமா செல்வராசு. வீட்டில் அனைவருக்கும் பிடித்தவராம். எப்போதும் ஆச்சியுடனே தான் இருப்பாராம். ஆச்சி வெளியே போகும் போது பெரியம்மாவிற்கு துணைக்கு இருக்க சொன்னால், திரும்பி வரும் வரை பெரியம்மாவை விட்டு நகரவே மாட்டாராம். அம்மா சித்திகளுக்கு காசு சேர்த்து வைத்து மிட்டாய் வாங்கி கொடுப்பாராம். அடிக்கவே மாட்டாராம். நல்லா படிப்பாராம். டாக்டர் ஆக வேண்டும் என்று ரொம்ப ஆசையாம்.  

ஆனால்  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு சமயத்தில் நிமோனியாக் காய்ச்சல் வந்து வைத்தியம் பலன் இல்லாமல் இறந்துவிட்டாராம்.

அப்போதிலிருந்தே ஆச்சி புது துணி கட்ட மாட்டார்களாம். வீட்டில் மகன், மருமகள்களை முதலில் கட்டச் சொல்லிவிட்டு பிறகுதான் கட்டுவார்களாம். பூ போட்ட சேலை, பச்சை வண்ண சேலை எல்லாம் உடுத்துவதையே நிறுத்தி விட்டார்களாம். இதற்கெல்லாம் குறிப்பிட்ட  காரணம் என்று எதுவும் சொல்லாமல் தவிர்த்துவிட்டார். 

இவை அனைத்தும் நடந்தது 1972இல். ஆனால் 2017இல் வரை கூட, ஆச்சிக்கு தூக்கத்தில் மாமா “அம்மா எங்கம்மா இருக்கீங்க? உங்களைக் காணோம்னு தேடினேன் மா…” என்று கேட்பது போல இருக்குமாம். 

“நான் இங்க தான்யா இருக்கேன்..” என்று சொல்லிக்கொண்டே எழுந்தால் பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்களாம்.

கட்டிலில் படுத்திருந்தால் நிலை கதவின் அருகில் இருப்பது போல உருவம் தெரியுமாம். மாமாவே வந்துவிட்டதாக தோன்றுமாம். என்றுமே நிறைவேற முடியாத பெரும் கனவு. 

இப்படி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளை மகனை இழந்து தவித்த ஆச்சியின் காத்திருப்பு இப்போது அவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் தன் மகனைப் பார்த்து முடிவுக்கு வந்திருக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொண்டு என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். 

விட்டுச் சென்றவரை நினைத்து அழும் நாம், நம்மை விட்டுச் சென்றவர், அவர் என்றோ பிரிந்தவரை சேர்ந்திருப்பர் என்று நினைப்பதில்லை. சில மரணங்கள், பிரிவைத்தாண்டி இறந்தவர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பின் முடிவாக இருக்கலாம். அதை நாம் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதை உணரும் போது அவர்களது பல வருட காத்திருப்பின் முடிவும், அந்த மரணம் அவர்களுக்கு தந்த நிம்மதியையும் நாமும் உணர முடியும். 

காத்திருப்புகளும் அந்த காத்திருப்புகளின் முடிவுகளுமாக இந்த வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது – மரணம் என்னும் அச்சாணியில்.

Leave a comment