கயல்விழி – கவர்ந்தாள்!

ஆசிரியர்: அகிலன்
பதிப்பகம் : தாகம்
விலை : ரூ.300
பெற்ற பரிசுகள் : 1968ல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1964-65ல் வெளியான சிறந்த வரலாற்று புதினம்.

கி.பி. 910ஆம் ஆண்டு பராந்தக சோழரிடம் போரில் மதுரையை இழந்தான் மாறவர்மன் இரண்டாம் ராஜசிம்மன். அன்றிலிருந்து பாண்டியக் கயல்கள் சோழ வேங்கையின் மேலாட்சியின் கீழ் ஏறக்குறைய 300 ஆண்டுகள் அடிமைபட்டுக்கிடந்தன. அந்த அடிமைத் தளைகளை உடைத்து பாண்டிநாட்டுக்கு புத்துயிர் தந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கதைதான் கயல்விழி.

சோழ தேசத்தின் மேலாட்சியை எதிர்த்து சுந்தரபாண்டியன் கிளர்ச்சி செய்ததால் குலோத்துங்கர் தன்னுடைய முழு படைபலத்தையும் கொண்டு மதுராந்தகம் செய்கிறார். இதில் இளங்கோ படுகாயம் அடைகிறான். அதே போரில் சோழ இளவசரனான ராஜராஜனால் பாதிக்கப்பட்ட பல பாண்டிய நாட்டுப் பெண்களில் ஒருத்திதான் பாணர்குல மங்கையான கயல்விழி. போரின் பாதிப்புகளால் மனமுடைந்து உயிர்துறக்க வரும் கயல்விழியும், போரில் படுகாயம் அடைந்த இளவரசனும் சுதந்திர பாண்டிய நாடு அமைய சூளுரைக்கின்றனர். அதன் விளைவுகள் தான் வரலாறு.

ஆசிரியர், அரசும் அரசனும் எப்படி இருக்கவேண்டும் என்பதன் பிம்பமாக சுந்தரபாண்டியனையும், குலோத்துங்க சோழரையும், எப்படி இருக்ககூடாது என்பதன் உதாரணமாக இராஜராஜனையும் வர்ணித்திருக்கிறார். அரசன் எவ்வழி ! நாடும் அவ்வழி! என்பதை அழகாக விளக்கியுள்ளார்.  பாணர் குல மங்கையான கயல்விழி, நான்மாடக்கூடலின் கயற்கண்ணியின் பிம்பமாகவும், கண்ணகியின் உருவமாகவும், வீரர்கள் கொண்டாடும் கொற்றவையின் வடிவமாகவும் வடிகப்பட்டிருக்கிறாள். கதையின் போக்கில் நீக்கமற நிறைந்து, நம் நெஞ்சங்களிலும் அசைக்கமுடியாத இடம் பிடித்துவிடுகிறாள் கயல்விழி.

தெய்வப்புலவர் வள்ளுவரின் வாக்கைகொண்டு பாண்டிய மக்களுக்கு இளங்கோ புத்துணர்ச்சி தருவதும், பாண்டித் திருமகள் கூத்து மூலம் போரின்  விளைவுகளையும் அவலங்களையும் அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். தன்னுடைய அனைத்து புத்தகங்களிலும் அமைதியை புகட்டும் ஆசிரியர் இந்த நூலிலும் போரினால் பெண்கள் படும் துன்பங்களை கயல்விழி பாத்திரம் மூலமாக நம் மனதில் ஆழப்பதித்துவிட்டார்.

கதையில் எனக்கு பிடித்த கற்பனைக்காட்சி : சோழப்படைகளால் அழிந்த மட்டியூரை புதுப்பிக்க இளங்கோவும், கயல்விழியும் பாண்டித் திருமகள் கூத்து மூலம் தென் பாண்டிநாட்டில் பொருள் திரட்டுகின்றனர். அதில் சேர்ந்த பொருட்களை ஆராய்கிறான் இளங்கோ. கூத்திற்கு வந்திருந்த பெண்கள் அளித்த மகரக் குழைகள், கழுத்தணி, நூபுறம் என அனைத்திற்கும் இடையே ஒரு காதோலையும் இருந்தது. ஒரே ஒரு வெள்ளிக் கம்பியால்  சுற்றப் பெற்ற தென்னை ஓலைச் சுருள் அது. பொன்னாலும், வெள்ளியாலும் அணிகலன் பூணாத ஒரு பெண், அதில் இருந்த வெள்ளிக் கம்பியை தன் தாய்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்னும் துடிப்பால் தந்த பொருள் அது. தனக்கு கிடைத்த மற்ற எல்லா பொருட்களையும் விட அந்த காதோலையை மிகவும் உயர்ந்ததாக கருதுகிறான் இளங்கோ.

கதையில் எனக்கு பிடித்த வரலாற்றுகாட்சி : மதுரையில் தன்னாட்சி நிலைக்க சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் முதல், இடை, கடை தலைநகரங்களான உறத்தை(உறையூர்), தஞ்சை மற்றும் கங்காபுரி(கங்கைகொண்ட சோழபுரம்) ஆகிய நகரங்களை அழித்து, கோயில்களை தவிர்த்து மற்ற கட்டிடங்களை ஒரு சுவரில்லாமல் தரைமட்டமாக்க தன் படைகளுக்கு கட்டளையிடுகிறான்.

உறையூர் வீழ்ந்து, மகர கொடி நகரமெங்கும் பட்டொளி வீசி பறக்கிறது. சோழ தேசத்து மண்டபங்களையும் மாளிகைளையும் பாண்டிய படை தரைமட்டமாக்குகிறது. ஒரு பதினாறு கால் மண்டபத்தை இடிக்க வீரர் கூட்டம் செல்வதை இளவரசன் கண்டு திடுக்கிட்டு அங்கே உடனே ஓடி வந்து அவர்களை தடுக்கிறான். அது கோயில் மண்டபம் இல்லையே என வீரர்கள் குழம்புகின்றனர். அது கோயிலுக்கு நிகரானது என காரணம் சொல்கிறான் சுந்தரபாண்டியன்.

“உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை இந்த மண்டபத்தில் தான் சோழன் கரிகால் பெருவளத்தான் முன்பு அரங்கேறியது. இங்கிருந்துதான் அவர் பாடினார். அந்தப் பாடலுக்குப் பரிசிலாகப் பதினாறு நூறாயிரம் பொன்னையும் இந்தப் பதினாறு தூண் மண்டபத்தையுமே வழங்கினார் கரிகாலன். கண்ணனாரின் பாலையால் அன்றிருந்த பூம்புகாரின் சிறப்பும், சோழரின் ஆட்சிச்சிறப்பும் காணுகின்றோம். மன்னனின் சிறப்புக்கு இந்த மண்டபமே சான்று கூறி நிற்கிறது. பைந்தமிழும் அதன் அறிவுச் செல்வமும் பண்புச் செல்வமும் ஒரு நாட்டார் மட்டிலும் போற்றக் கூடியவையல்ல. ஒரு நாட்டிலுள்ள புலமைச் செல்வத்தைச் சுட்டிக் காட்டும் தூண்கள் இவை. மன்னனுக்கும் மக்களுக்கும் வழிகாட்டும் என்றும் அழியாப் புகழ்கொண்ட புலவர்களின் நினைவுச் சின்னம் இது”.

இதை கூறும் பாடல் திருவெள்ளாறை என்ற சிற்றூரில் உள்ள சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டில் உள்ளது.

வெறியார் தளவத் தொடைச்
செயமாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி
நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை ! கண்ணன்
செய் பட்டினப்பாலைக் கண்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமே
யங்கு நின்றனவே!