கரந்தை கருணாசாமி கோயில் உலா

கருணாசாமி கோயில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் குதிரைகட்டித் தெருவில் அமைந்துள்ளது.

சோழ நாட்டு வைப்புத் தலமான இக்கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதாகும். இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், கருவேலநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்.

நற்கொடிமேல் விடையுயர்ந்த நம்பன் செம்பங்

குடிநல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி

கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி

கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்

விற்குடி வேள்விக்குடி நல்வேட்டக்குடி

வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி

புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி

புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வாயிலின் அருகே அமிர்த புஷ்கரணி என்றும், சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படும் கோயில் தீர்த்த குளம் உள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடி கரிகாலன் கருங்குஷ்டம் நீங்கப் பெற்றதால் அவனுக்கு அருள்புரிந்த இறைவனுக்கு கருணாசுவாமி என்ற பெயர் வழங்கப்பட்டதாக ஒரு தொன் நம்பிக்கை உள்ளது. இங்கு தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் நோய்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

கோயிலின் தீர்த்த குளத்தின் அருகே அமைந்துள்ள வாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் முதலில் கொடி மரமும் பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மண்டபத்தில் வலது புறம் நர்த்தன கணபதி, முருகன், விநாயகர் ஆகியோரும், இடது புறம் சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

மூலவரான வசிஷ்டேஸ்வரர் சன்னதிக்கு வெளியே வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். வாயிலின் இரு புறமும் சிறந்த வேலைப்பாடுடன் கூடிய துவார பாலகர்கள் அமைந்துள்ளனர். கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.

மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், ஆடலரசர், அப்பர், கங்காளர், ரிஷிபத்தினி, விநாயகர், தட்சிணாமூர்த்தி,  வசிஷ்டர் எனப்படும் அகஸ்தியர், அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்காரர், பிட்சாடனர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். தமிழக சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் அழகான, அதிகமான சிற்பங்களைக் கொண்டுள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஏழு லிங்கங்கள், தொடர்ந்து ஜுரகரேஸ்வரரைக் குறிக்கும் தண்ணீரால் சூழப்பட்ட லிங்கம், கஜலட்சுமி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில், வசிஷ்டேஸ்வரர் சன்னதியின் வடமேற்கு திசையில் தல மரமான வன்னி மரம் உள்ளது. மரத்தின் முன்பாக பைரவரையும் நாகத்தையும் காணலாம்.திருச்சுற்றில் துர்க்கையம்மன் சன்னதியும் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன.

மூலவர் சன்னதியின் இடது புறமாக பெரியநாயகி என்றழைக்கப்படும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இச்சன்னதியின் முன்பும் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர்.

வெளித் திருச்சுற்றில் நான்கு மூலைகளிலும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. மேற்கு வாயிலில் பாலதண்டாயுதபாணி சன்னதி உள்ளது. கோயிலின் வெளிச்சுற்றில் நான்கு திசைகளிலும் வாயில்கள் காணப்பட்டபோதிலும், தென்புற கோயில் வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இத்தென்புற கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள சப்தஸ்தானக்கோயில்களில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானமும் ஒன்றாகும். கரந்தை சப்தஸ்தானத்தில் உள்ள கோயில்களில் இக்கோயில் முதன்மைக் கோயிலாகும். பிற கோயில்கள் கூடலூர் சொக்கநாதசுவாமி கோயில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோயில், தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில், புனைனைநல்லூர் கைலாசநாதர் கோயில், பூமாலை வைத்தியநாதேஸ்வரர் ஆகியனவாகும்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை  கரந்தட்டாகுடி  சப்தஸ்தானப் பல்லக்கு சிறப்பாக நடைபெற்றதாகவும், இக்கோயிலின் பல்லக்கு தான் மிகவும் பெரியதாக இருந்ததாகவும் பொதுமக்கள் கூறினர்.

கரந்தை சப்தஸ்தானக் கோயில்களில் ஒன்று என்ற சிறப்பையும், வைப்புத்தலம் என்ற பெருமையையும் கொண்ட, 2 பிப்ரவரி 2017 அன்று குட்முழுக்கு நடைபெற்ற, இக்கோயிலுக்கு சென்று நோய்கள் தீர்க்கும் வசிஷ்டேஸ்வரர் அருளை பெறுவோம்.

This slideshow requires JavaScript.

துணை நின்றவை:
தேவார வைப்புத் தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 2009, பக்.224-225
4 பிப்ரவரி 2017   அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் திரட்டப்பட்ட விவரங்கள்