ஓசோன் ஓட்டை

81

முதலில் பதியப்பட்ட நாள் : 5 நவம்பர் 2010

பாஞ்சாலியின் கதறல் கேட்டு
அவளை காக்க கண்ணன் வந்தான்
அன்று…

இன்று…
காப்பாற்ற கண்ணனும் இல்லை
கதற பூமிக்கு வாயும் இல்லை!!!

Advertisements

அவனும் மனிதன் தானே?

இந்த கதை என்னுடைய blogspot பக்கத்தில், 18 சூன் 2010ல் பதியப்பெற்றது. நான் எழுதிய முதல் கதை. இப்போது இதை படிக்கும் போது, எனக்கே வியப்பாக இருக்கிறது. எதையும் மாற்றாமல் அப்படியே மறுபதிவு செய்கிறேன், இனிமையான கல்லூரி நினைவுகளுடன்….

எப்போதும் போல தமிழ்ச்செல்வன் தன் நண்பர்களின் வருகைக்காக கல்லூரியில் காத்திருந்தான். அவனது நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து வருவதால் அனைவரும் ஒரு இடத்தில் கூடி சில மணித்துளிகள் பேசி பிறகு சேர்ந்து வகுப்புக்குச் செல்வது வழக்கம். சிறிது நேரம் கழித்து அவனது நண்பர்கள் வந்தனர். அன்று திங்கட்கிழமை. அனைவரும் வார இறுதியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால் தமிழ்ச்செல்வன் மட்டும் அமைதியாக இருந்தான். எப்போதும் நண்பர்களைப் பார்த்தால் சிரிப்புடன் காணப்படும் அவனது முகம் வாடியிருந்ததை அருண் மட்டும் கவனித்திருந்தான். சற்று நேரத்தில் கல்லூரி மணி ஒலித்தது. உடனே அனைவரும் தத்தம் வகுப்புக்குச் சென்றனர்.

அன்று முழுவதும் அருண் தமிழ்ச்செல்வன் குழப்பமாக இருந்ததற்கான காரணத்தைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். கல்லூரி முடிவடைந்தது. தமிழ்ச்செல்வனிடம் அருண் கேட்டான்

“ஏண்டா தமிழா! காலயில ஒண்ணுமே பேசாம அமைதியா உக்காந்திருந்த? என்னடா நடநத்து?”

“ஒண்ணுமில்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன்”

“இல்ல நீ எதையோ என்கிட்டேயிருந்து மறைக்கிற. சொல்லக்கூடாதுனா சொல்ல வேண்டாம். நான் கேக்கல”

“சொல்லக்கூடாதுனு எல்லாம் ஒண்ணும் இல்லடா. நேத்து ஒரு சம்பவம் நடந்துச்சுடா அதிலிருந்து ஒரு குழப்பம். அவ்வளவுதான்.”

“என்ன நடந்துச்சு?”

“நேத்து நான் படம் பாக்க தியேட்டருக்கு போயிருந்தேனா. அங்க ஒரு காட்சிய பாத்ததிலிருந்து இனிமே படமே பார்க்க கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன்”

“உன்ன இந்த அளவுக்கு பாதிச்ச சம்பவம் என்னடா? ஏன்டா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க?”

” தியேட்டர்ல டிக்கெட் வாங்குவதற்காக நான் வரிசையில நின்னுகிட்டு இருந்தேனா… அப்போ ஒரு சின்ன பையன், ரெண்டாவது இல்ல மூனாவது தான் படிப்பான் அவன் அங்க பட்ஸ் வித்துக்கிட்டு இருக்கான். ஒரு பாக்கெட் 5 ரூபாயாம். அனைவரிடமும் வாங்கும்படி கேட்டுக்கொண்டிருந்தான். அதை வித்தாலும் அவனுக்கு பெருசா லாபம் ஒண்ணும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் நானோ 40 ரூபாய் உள்ள டிக்கெட்டை தியேட்டர் கவுண்டரிலேயே 80 ரூபாய் கொடுத்து அந்த படத்தை பார்க்கிறேன். அந்த 80 ரூபாய் இருந்தால் அவனுடைய ஒரு வார செலவுக்கே ஆகும், நான் அதை வெறும் 3 மணி நேரப் பொழுது போக்குக்காக செலவு செய்யறேன். இதை நினைத்தால் எனக்கே வெட்கமா இருக்குதுடா. ஒருத்தனோட ஒரு வார உணவு செலவை நான் தெண்டமா செலவு செஙய்றேன். அதான் படத்துக்கே இனிமே போகக் கூடாதுனு முடிவெடுத்திருக்கிறேன்.”

“நீ சொல்றது எல்லாம் சரிதான்டா நான் ஒத்துக்குறேன். நீயாவது அவன் வித்த பொருளை வாங்கினாயா?”

“இல்லடா. என்கிட்ட படத்துக்கு மட்டும்தான் சரியா பணம் இருந்துச்சு. அதனால வாங்கல. இல்லேன்னா வாங்கியிருப்பேன்”

“சரி. இதுக்காக நீ படத்துக்கு போகமாட்டேன்னு சொல்றது முட்டாள்தனமாக இருக்கு.”

“நீ இப்போ படத்துக்கு போகாம இருந்தா மட்டும் அவன் பிரச்சனை தீர்ந்தா போகப் போகுது? அது மட்டுமில்லாம உன்னிடம் பணம் இருந்திருந்தா நீ அவன் வித்த பொருளை வாங்கியிருப்ப. நீ இப்போ படத்துக்கு போகாததால அவனோட ஒரு வியாபாரத்தை அவனை இழக்க வைக்கிற. நீ இப்போ படத்துக்கு போகாததால அவனுக்கு ஏதாவது லாபம் இருக்கா? இல்ல. அதனால இது மாதிரி நினைத்து நீ தேவையில்லாம குழப்பமடையாதே”

“நீ என்னதான் சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியல”. என்றான் தமிழ்ச்செல்வன்.

பிறகு இருவரும் வீடு திரும்பினர். தமிழ்ச்செல்வனால் அருண் சொன்னதை ஏற்க முடியவில்லை. நாட்கள் ஓடின. மெல்ல மெல்ல அந்த நினைவின் பாதிப்பு அவனிடம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அவன் அதை மறக்கவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு. . .

அதே தியேட்டரில் அதே இடத்தில் அடுத்த நாள் வரப்போகும் படத்துக்காக டிக்கெட் எடுக்க தமிழ்ச்செல்வன் நின்று கொண்டிருந்தான். அப்போது அதே சிறுவனை பார்த்தான். இந்த முறை அவன் விற்ற பொருளை வாங்கினான். அன்று அருண் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் இன்று??? சொன்னதைச் சொன்னவாறே செய்வதற்கு அவன் என்ன மகானா அவனும் ஒரு சாதாரண மனிதன் தானே?.