ஊழ்

திரைத்துறையின் தலைசிறந்த நடிகன் என்ற பட்டத்தோடு ‘வாழ்ந்து கெட்டவன்’ பட்டமும் பெற்றிருந்தான் அந்த ‘ஏதோவொரு’காந்த். இப்போதெல்லாம், அப்பா தாத்தா வேடங்கள் கூட அருகிவிட்டிருந்தது. ஒரு தொலைப்பேசி அழைப்பு. அவன் முதன் முதலில் பிரபலப்படுத்திய சிகரெட் கம்பெனி விளம்பரத்திற்காக. கேன்சர் நோயாளி வேடமாம். சரி என்று இணைப்பை முடித்தவன் தொடர்ந்து இருமிக்கொண்டேயிருந்தான்.

பிரிவு

மழை வந்ததும் கூடவே வந்துவிட்டது அவள் நினைவுகள். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் அருண். அவளது நினைவுகள் இன்னும் மனதில் பசுமையாக தோன்றி மறைந்துகொண்டிருந்தன. இப்படி ஒரு பிரிவு அவர்களுக்குள் வருமென்று நினைத்திருக்கவேயில்லை அவன். எங்கே சென்றாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசிவிட்டுத்தான் அவர்களது நாள் முடியும்.

ஆனால், இன்றோடு அவளுடன் பேசி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஆற்றமையை இந்த மழை வேறு தூண்டிக்கொண்டிருக்கிறது. அவள் நினைவுகளால் மெல்ல அவனது கண்கள் குளமாகின.

அங்கே அவள், மேகங்களுக்கெல்லாம் அப்பால் சர்வதேச விண்வெளி மையத்தில், “கல்பனா ஹியர் ரிப்போர்ட்டிங் ப்ரம் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்…. ” என்று தன் முதல் செய்தியை பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள்.