திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

This slideshow requires JavaScript.

திருப்புறம்பியம், மண்ணியாற்றங்கரையில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊராகும். 

இங்குள்ள சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற புகழைக் கொண்டதாகும். காவிரி வடகரைத் தலங்களில் 46ஆவது இடத்தில் உள்ளதாகும். இங்குள்ள இறைவன் சாட்சிநாதர், இறைவி கடும்படுசொல்லியம்மை.

பிரளயத்திற்கு புறம்பாக இருந்ததால் திருப்புறம்பியம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர், புன்னாகவனம், கல்யாண மாநகர், ஆதித்தேஸ்வரம் என பல பெயர்களைக் கொண்டது. இத்தல இறைவன் சாட்சிநாதர் என்று அழைப்படுவதற்கான நிகழ்வு இங்கு மிகவும் பெருமையாக பேசப்படுகிறது. மதுரையில் வசித்த வணிகன் ஒருவன், உடல்நிலை சரியில்லாத தன் மாமனைக் காண திருப்புறம்பியம் வருகிறான். அவன் மாமன், தன் மகளை வணிகனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிடுகிறான். அவளை அழைத்துக்கொண்டு மதுரை செல்லும் முன்பு இத்தலத்தில் தங்கியிருந்த போது, பாம்பு கடித்து இறந்துவிடுகிறான். அந்தப்பெண் சிவபெருமானிடம் முறையிட, இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவர்களுக்கு மணமுடிக்கின்றார். மதுரையில், அவ்வணிகனின் முதல் மனைவி, அவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை என்று அப்பெண் மீது பழி கூறுகிறாள். இரண்டாம் மனைவி, திருப்புறம்பியம் இறைவனிடம் முறையிடுகிறாள். இறைவன், வன்னி மரம், மடைப்பள்ளி, கிணற்றோடு மதுரை சென்று திருமணத்திற்கு சாட்சி கூறுகிறார். இதனால் இங்குள்ள இறைவன் சாட்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருவது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ஆதித்த சோழன், இக்கோயிலை செங்கற்கட்டுமானத்திலிருந்து கருங்கற்றளியாக மாற்றினார். கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரத்தை கடந்து சென்றால் மூலவரான சாட்சிநாதர் சன்னதி அமைந்துள்ளது. இருபுறமும் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். மூலவருக்கு முன்பாக மற்றொரு நந்தியும் பலிபீடமும் உள்ளன.

மூலவர் சன்னதியின் இடப்புறம் குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கடும்படுசொல்லியம்மை சன்னதியும் உள்ளன. ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும்  குஹாம்பிகை சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

மண்டபத்தின் வலப்புறம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் சன்னதி உள்ளது. நடராஜர் மண்டபமும், நவக்கிரக சன்னதியும் உள்ளன.

திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகியவை உள்ளன. அதைத் தொடர்ந்து லிங்க பானம், லிங்கங்கள், மூன்று நந்திகள் என பல சிற்பங்கள் உள்ளன. தட்சிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ள தளத்திற்கு மேல் தளத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. 

இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக இங்குள்ள பிரளயங்காத்த விநாயகரைக் கூறலாம்.  பிரளயத்திலிருந்து காத்தமையால் இவர் பிரளயங்காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொறுப்பை  சிவபெருமான், விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்ற விநாயகர், ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். அந்தக் கிணறு ஸப்தசாகரகூபம் (ஏழு கடல் கிணறு) என்று வழங்கப்பட்டு, இன்றும் கோயில் தீர்த்தமான பிரம்மதீர்த்தத்தின் கிழக்கே காணப்படுகிறது. இத்தலத்து பிரளயங்காத்த விநாயகரை வருணபகவான் கடல் பொருட்களான சங்கம், நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார் என்று நம்பப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை விநாயகர் சதுர்த்தி அன்று இரவு மட்டும் தேனால் அபிஷேகம் செய்யபப்டும்போது, அனைத்து தேனும் விநாயகர் திருமேனியால் உறிஞ்சப்படுவது அதிசயமாகும். மற்ற நாட்களில் விநாயகருக்கு எந்த ஒரு அபிஷேகமும் செய்யப்படுவது கிடையாது. இதனால் இந்த விநாயகர், தேன் அபிஷேகப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர், லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்டங்களில் உள்ள இச்சிற்பங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளமை காண்போருக்கு  வேதனையைத் தருகிறது. தேவக்கோஷ்டங்களுக்குக் கீழே  பாற்கடல் கடைதல், சிவபெருமான் உமையுடன் காணப்படல், மார்க்கண்டேயர் கதை உள்ளிட்ட மிகச் சிறிய அளவிலான நுட்பமான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும்போது அய்யம்பேட்டை அருகேயுள்ள புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலும், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலும் நினைவிற்கு வரும்.

பாடல் பெற்ற தலம், நுட்பமான சிற்பங்கள், வரலாற்று முக்கியத்துவம் என்ற நிலையிலுள்ள இக்கோயிலின் குடமுழுக்கு 44 ஆண்டுகளுக்கு பிறகு கடந்து மார்ச் மாதம் 18 ஆம் நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  திருமண பரிகாரத் தலமான இக்கோயிலுக்கு நாமும் சென்று சாட்சிநாதேஸ்வரர் அருள் பெறுவோம். 

ஹெரிட்டேஜர் தமிழ் ஜுலை 2018., இதழில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. (பக்.6-8)