கடல் கொண்ட தென்னாடு

அதோ! லெமூரியா கண்ணுக்குத் தெரிகிறது.

உலகம் கண்டு வியந்த வன விலங்குகளையும், பறவைகளையும், வானோக்கி வளர்ந்த மரங்களையும், செடிகளையும், உலகம் கண்டுபிடிக்காத உலோகங்களையும், தாதுக்களையும், உலகத்தால் முன்னேறாத நாகரிகத்தையும், உலகத்தின் முன்னோடியாக விளங்கிய மொழியையும் தன்னகத்தே கொண்ட லெமூரியா, அதோ காட்சியளிக்கிறது!

லெமூரியா. தமிழர் அனைவரும் அவர்களுக்குள்ள தொன்மையை பறைசாற்ற சொல்லும் முதல் சொல். குமரிக்கண்டம், நாவலந்தீவு என்றெல்லாம் அழைக்கப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. ஏழ்தங்க நாடு, ஏழ்குணகரை நாடு, ஏழ்குறும்பனை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் குன்றநாடு, தென்பாலி, கொல்லம், நாவலர் தன்பொழில் ஆகிய நாடுகளும் அவை அடங்கியிருந்த ஏழ்மதுரை என்று புகழ்பெற்ற குமரி நாடும் இந்நிலப்பரப்பிலே அடக்கம்.

நீலக்கடல்!
அதற்கு மட்டும் சரித்திரம் எழுதத் தெரியுமானால், எவ்வளவோ விஷயங்களை அது எழுத முடியும்.

இங்கு இருந்த மனிதர்களைப் பற்றியும், அவர்களின் அகத்திணைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ள நூல்தான் “கடல் கொண்ட தென்னாடு”. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் காதல் போராட்டமும் அதிகார போராட்டமும்தான் கதை.

மக்கள்!
அவர்கள் நல்லவர்கள். ஒருவனுக்குப் பதவி வந்தாலும் கை தட்டுவார்கள்; அவன் தண்டிக்கப்படும்போதும் அதே மக்கள் கைத்தட்டுவார்கள்.

கம்பளி யானை, நீள் வேங்கை, தினோஸாரியா, மந்தாக்குரங்கு, லெமூர் குரங்குகள் என்றிருந்த மிருக வகைகள். வாதுளம், கச்சாப்பழம், வரத்தாழை, கோதை நெல்லிக்கனி போன்ற பழவகைகள். செம்மாஞ்சி, சம்பல் போன்ற பறவையினங்கள். பஃறுளியாறு, செம்மரம், யூகிலிப்டஸ் என லெமூரிய நிலப்பிரப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

எபிரேய, சுமேரிய, பாலி, சமஸ்கிருத, பிராகிருத மொழிகளைப் போல, காலந்தெரியாத மொழி தமிழ் மொழி. அது மூலதேவனால் அருளப்பட்டது என்பார்கள். அகரத்தில் தொடங்கி, உலகின் சிகரத்தில் வாழ்ந்து வரும் அந்த மொழிக்கு புதிய ஆக்க தருவதற்காகவே இந்தச் சங்கம்.

தென்மதுரைத் தலைவனான நிலந்தரு திருவிற்பாண்டியன், இறையனாரைத் தலைவராகக் கொண்டு முதல் தமிழ்ச்சங்கம் உருவாக்குவதும், லெமூரியா கடற்கோளால் அழிவது, இமயமலை தோன்றுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வஞ்சிக்கின்றவனுக்கு ரத்த பாசம் ஏது ? அரசாங்கங்ளில் இது ஒருவகை தர்மம். நேரம் பார்த்து இடத்தைப் பிடிப்பதே நியாயம் என்றாகிவிட்டது.

துன்பங்களிலேதோன் பற்றும் பாசமும் பரிணாம வளர்ச்சியடைகின்றன.

திருவிற்பாண்டியனின் மகன் வில்லாளன், நீலவிழி, செவ்வல்லி, பூம்பாவை,  கண்டதேவன், மணியழகி, செமோசி, அபிராசி, கடல் தெய்வமான பூதகி என்று பலரும் கதையில் வருகின்றனர். நாயகியாக அறிமுகமான நீலவிழி தீயஎண்ணகளாலும் பொறாமையாலும் அனைத்தையும் இழந்து தண்டிக்கப்படுவதும், கர்வியாக அறிமுகமாகும் அருவாநாட்டு இளவரசி பூம்பாவை நன்மதிப்பை பெறுவதுமாக கதை நகரும் விதம் அருமை. அம்ருதா என்ற ஆவியின் ஜாலங்கள் கதையின் நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.

மனிதனுக்கு பதவி வரக்கூடாது; வந்தால் போகக்கூடாது.

KadalKondaThennaduஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பக்கங்கள் : 280
பதிப்பகம்  : கண்ணதாசன் பதிப்பகம்
ஆண்டு: பத்தாம் பதிப்பு / 2015 அக்டோபர்

 

 

Advertisements

ஒரு நதியின் கதை

கண்ணதாசன் அவர்கள் தன் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளின் அடிப்டையாகக் கொண்டு எழுதிய நான்கு சிறு கதைகளின் தொகுப்பு ஒரு நதியின் கதை. இந்நூலில் அடங்கிய நான்கு சிறுகதைகள்

  1. காவேரி
  2. கவிஞனும் தத்துவமும்
  3. தீர்ப்பு
  4. சிறையிலிருக்கும் காதலர்க்கு

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல சமயங்களில் எழுதிய கதைகள். என்னை மிகவும் கவர்ந்தது ‘சிறையிலிருக்கும் காதலர்க்கு’. தன்னை மறந்துவிடும்படி சிறையில் உள்ள தன் காதலனுக்கு காதலி எழுதும் கடிதம். அவள் சொல்லும் காரணம் தெரியவேண்டுமா? மேலும் படிக்க.

இந்தப்புத்தகதில் எனக்குப்பிடித்த சில பகுதிகள்:

“ஊழல் எங்கே பிறந்தது? இப்பொழுது எங்கெல்லாம் வளர்ந்து வருகிறது?”, என்று கேட்டால், “பெரிய மனிதர் என்று பெயரை வைத்துக்கொண்டிருப்பவர்களின் வீட்டில்” என்று தாராளமாய்ச் சொல்லிவிடலாம். ஏதாவது ஒரு வகையில் அங்கு ஊழல் இருந்து கொண்டுதான் இருக்கும்.

“கெட்டும் பட்டணம் சேர்” என்பார்கள். கெடாமலே பட்டணம் சேர்ந்த முத்தையனுக்கு சென்னை நகரின் விசித்திரச் சூழல்கள் சற்று வெறுப்பைத் தந்தன.

 

மனிதன் லட்சியம் லட்சியம் என்று கதறுகிறான்; லட்சியம் மனிதனை, சுடுகாட்டிற்கு அனுப்பி விடுகிறது. லட்சியத்தின் எல்லைக்கோட்டை மனிதன் எட்டியதே இல்லை; எட்டப்போவதும் இல்லை; எதை லட்சியம் என்று கருதுகிறானோ, அதை அடைந்ததும் அவனுக்கு புது லட்சியம் ஒன்று உடனடியாக ஏற்பட்டுவிடுகிறது. லட்சியம் ஒரு வகையில் மிருக வெறியைச் சேர்ந்ததுதான். லட்சியம் நிறைவேறிவிட்ட பிறகு அதை அலட்சியம் செய்து விடுகிறானே மனிதன்! இன்பச் சுவைக்காக தாசி வீட்டை நோக்கிச் செல்லும் மனிதனுக்கும், ஏதோ ஒரு தேவையை “லட்சியம்” என்று பெயரிட்டழைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

“பணக்காரன் என்றால் யார்?”
“பணம் வைத்திருப்பவன்!”
“அப்படியானால் இரண்டு ரூபாய் வைத்திருப்பவனுக்கு மூன்று ரூபாய் வைத்திருப்பவன் பணக்காரன். மூன்று ரூபாய் வைத்திருப்பவனுக்கு ஐந்து ரூபாய் வைத்திருப்பவன் பணக்காரன். ஐந்து ரூபாய் வைத்திருப்பனுக்குப் பத்து ரூபாய் வைத்திருப்பவன் பணக்காரன்!!”.
அப்போது சதை முதலாளிகளைக் காட்டிலும் கல் முதலாளிகளிடம் பணம் நிறையக் குவிந்திருக்கிறதே! அதை கவனிக்க வேண்டாமா?

 

Oru Nadhiyin Kathai

ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பக்கங்கள் : 64
பதிப்பகம்  : கண்ணதாசன் பதிப்பகம்
ஆண்டு: மூன்றாம் பதிப்பு / 2013 மே