சிவப்புக்கல் மூக்குத்தி

ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வரலாற்றை எழுதப் புகுந்தால், நாட்டுக்குப் பல இராமாயணங்கள் கிடைக்கும்.

திருக்கடையூர் அருகே ஒரு கிராமத்தில் வளர்ந்து வரும் ஜானகி, பட்டணத்தில் நல்ல வசதி வாய்ப்புடன் உள்ள சுரேந்திரனின் குடும்பத்தில் திருமணமாகிப் போகிறாள். திருமண வாழ்வும் சுகமாக சென்று கொண்டுள்ளது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் தாண்டியும் இருவருக்கும் குழந்தையில்லை என்ற குறையைப் போக்க, தானே தன் தங்கை மைதிலியை சுரேந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். மூவருடைய வாழ்க்கையும் நன்றாக சென்றுகொண்டிருக்க மைதிலிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை கண்ணில்லாமல் பிறந்து சில நாட்களிலேயே இறக்கிறது.

நல்ல இடம் என்றால், எங்கள் கிராமத்திலே, லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் என்று அர்த்தமல்ல. தாய், தகப்பன், பாட்டன், பாட்டி எல்லாருமே உத்தமமாக வாழ்ந்தவர்கள் என்று அர்த்தம்.

மைதிலியை திருக்கடையூரிலிருந்து கணவன் வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது ரயிலில் ஒரு ஏழைப்பெண் கைக்குழந்தையுடன் இருப்பதைப் பார்க்கிறாள். அவளுடைய குழந்தைக்கு மைதிலி பால் கொடுக்க அவள் ஜானகியிடம் ஒரு சிவப்புக்கல் மூக்குத்தியைத் தந்துவிட்டு அதற்குரிய பணமோ பொருளோ பெறாமல் சென்றுவிடுகிறாள்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு காரியத்துக்கு இறைவன் சில தேதிகளை நிர்ணயித்திருக்கிறான். ‘எந்தச் சிற்றாறு எந்தப் பேராற்றைச் சந்திக்க வேண்டும்’ என்பதையும், ‘எந்தப் பேராறு எந்தக் கடலில் கலக்க வேண்டும்’ என்பதையும் அவனேதான் முடிவு செய்கிறான்.

சில மாதங்களில் ஜானகிக்கு ஒரு பெண் குழந்தை நல்லமுறையில் பிறக்கிறது. மைதிலிக்கு மறுமுறையும் குழந்தை இறந்தே பிறக்கிறது. இம்முறையும் அந்தப் பெண் சிவப்புக்கல் மூக்குத்தியை மைதிலிக்கு அணிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிடுகிறாள். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையால் அவள் மூக்குத்தியை மைதிலிக்கு விட்டுவிட்டுச்சென்றுவிடுகிறாள்.

பின்பு ஜானகி என்ன ஆனாள், மைதிலிக்கு குழந்தை பிறந்ததா? சிவப்புக்கல் மூக்குத்தி தந்த பெண் யார் என்ற கேள்விகளின் பதிலே சிவப்புக்கல் மூக்குத்தியின் மீதி கதை.

விறுவிறுப்பான இக்கதையை கவியரசர் ஆறே மணிநேரத்தில் சொல்லச்சொல்ல அவர் தம்பி எழுதியதாக முன்னுரையில் கூறியுள்ளார். இந்தக் கதை திரைப்படமாகவும் வெளிவந்துள்ளதென்பது கூடுதல் செய்தி.

sivapukal mookuthi

ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பக்கங்கள் : 280
பதிப்பகம்  : கண்ணதாசன் பதிப்பகம்
ஆண்டு: இருபதாம் பதிப்பு / 2013 அக்டோபர்

2 thoughts on “சிவப்புக்கல் மூக்குத்தி

Leave a comment