பேனா முத்தம் – CHAPTER 2

அத்தியாயம் 2

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு அவன் இதே மாதிரி ரயிலில் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்ததுண்டு, ஆனால் அன்று அந்த பயணத்தின் முக்கியத்துவத்தை மாதவன் (ஆம் அதுதான் நாம் மோட்டார் வண்டியில் சந்தித்த பிரயாணியின் பெயர்) உணர்ந்திருக்கவில்லை.

மாதவன், பெயருக்கு தகுந்தாற்போல் லட்சணம் பொருந்திய முகம், கணிவான பார்வை, இனிமையான பேச்சு என பார்ப்பவர் அனைவரையும் கவரும் உருவம் கொண்டவன். பள்ளியில் அவனை பிடிக்காதவர் எவருமே இல்லை என்றே சொல்ல வேண்டும். அனைத்து ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் மிகவும் பணிவுடனும் அன்புடனும் நடந்து கொள்வான். ஆனால் படிப்பில் என்னவோ சுமார் தான். அதற்காக யாரும் அவனை வெறுத்தது கிடையாது, ஒரே ஒருவரை தவிர. அவர்தான் மாதவனின் தந்தை ராஜசேகரன், அரசு அலுவலகத்தில் குமாஸ்தா. மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று போராடி கடைசியில் குமாஸ்தா ஆனவர். தன் கனவை தம் மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள விருப்பம் கொண்ட இலட்சோபலட்ச பெற்றோர்களில் ஒருவர். இப்படி தன் மகனை பற்றி கனவு கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கு மகனுக்கு படிப்பில் இல்லாத ஆர்வம் இலக்கியத்தில் வந்தால் வெறுப்பு வருவது இயற்கையேயல்லவா?

சிறு வயது முதலே மாதவனுக்கு மற்ற பாடங்களை விட தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிக ஆர்வம் உண்டு. மற்ற பாடங்களில் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றாவது பாஸ் ஆகி விடுவான், ஆனால் மொழிப்பாடங்களில் ஒரு முறையேனும் அவனுக்கு 80 மதிப்பெண்களுக்கு கீழ் வந்தது கிடையாது. அவன் 10ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு தனியார் வார இதழ் சிறுகதை போட்டி நடத்தியது. அதில் கலந்து கொண்ட மாதவன் சமுதாய அவலங்களை சாடும் ஒரு சிறுகதை எழுதினான். அதற்கு முதல் பரிசும் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு தன் தந்தை பூரிப்பார் என்று எதிர்பார்த்த மாதவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. தந்தையின் மனதை காயப்படுத்த விரும்பாத மாதவன் அதிலிருந்து கதை எதுவும் எழுதவில்லை. ஆனால் பல கதாபாத்திரங்கள் அவன் மனதில் குடியேருவதையும் அவனால் தடுக்க முடியவில்லை. அவனுக்கு எப்போதுமே அவர்களை பற்றிய சிந்தனைதான் இருந்து கொண்டிருந்தது, அதிலும் அதிகமாக கதையின் நாயகியை பற்றியே. அவன் கதாநாயகி சில நேரம் நிழல் உருவமாய் அவன் கண்ணுக்கு தெரிவாள் சில நேரம் அவன் காதுகளில் மட்டும் இரகசியம் பேசுவாள். இப்படியே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. நாட்களுடன் சேர்ந்து அவன் கதாநாயகியும் வளர்ந்துவிட்டாள். ஒரு உருவமும் பெற்றாள், ஆம் அவன் கவிதைகளின் மூலம்!!

அவன் கவிதைகள் பெரும்பாலும் ஒரு பெண்ணை வர்ணிப்பதாகவே இருந்து வந்தது. அவன் கவிதைகளை படித்த அவன் நண்பர்கள் உண்மையிலேயே ஒரு பெண்ணிடம் இவன் மனம் சென்றுவிட்டது என்று எண்ணினார்கள். அவன் எவ்வளவு மறுத்தும் பயன் இல்லை. அவன் நண்பர்களின் கேலிபேச்சுகளை கேட்டு கேட்டு அதை விரும்ப ஆரம்பித்த மாதவன் சில நாட்களில் தன் கதையின் நாயகியானவளை காதலியாக்கினான். அவளுடன் சொப்பன லோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வந்தது. அதில் எவ்வளவோ கடினமாக படித்து தேர்வுகளை எழுதி முடித்தான் மாதவன். விடுமுறைக்காக ஒரு மாதம் சென்னையிலிருந்த தன் மாமன் வீட்டுக்கு சென்றான். அங்கு உறவினருடன் நன்கு பொழுதை கழித்தான். அவன் கண்ட இடங்களிலெல்லாம் அவளையே கண்டான். அந்த நினைவிலேயே இன்பம் கொண்டான். இப்படி ஒரு சௌந்தரியவதியை நாம் இவ்வாழ்நாளில் காண்போமா என்று அவன் எண்ணமிட ஆரம்பித்தான்.  ஒரு மாத விடுமுறையும் விரைவாக உருண்டோடியது. தன் பாட்டி மற்றும் மாமா குடும்பத்தினருடன் தஞ்சைக்கு ரயிலில் கிளம்பினார்கள். விடுமுறை காலம் ஆதலால் ரயிலில் ஒரே கூட்ட நெரிசல்.

அந்த கூட்ட நெரிசலில் ஒரு காட்சியை கண்டு பிரமித்து போய் நின்றான். “இப்படியும் ஒரு சௌந்தரிய வதியை பிரம்மன் படைத்தானா? அவள் தான் என் கண் முன் நிற்கின்றாளா அல்லது இது வெறும் பிரமையா? நான் காண துடித்துக் கொண்டிருந்த பெண் இவள்தானோ? அல்லது இதுவும் நான் தினமும் காணும் கனவுகளில் ஒன்றா?” என்று தனக்குத்தானே ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான் மாதவன். அப்போது, “மது வாடி போகலாம் அங்கே ஒரு இடம் இருக்குது”, என்று சொல்லி ஒரு மூதாட்டி அவளை கூட்டிக்கொண்டு போனாள்.

அவளோடு அவன் மனமும் போனது. அவளை மறுபடியும் காண மாட்டோமா என்று அவன் கண்கள் ஏக்கம் கொண்டன, இமை மூட மறுத்தன. ரயில் பயணமும் முடிந்தது.

தொடரும்…

For the first chapter visit the following link:

https://sivathesman.wordpress.com/2012/06/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-chapter-1/

Advertisements

பேனா முத்தம் – CHAPTER 1

அத்தியாயம் 1

மேலும் ஒரு சாதாரண நாளை பார்த்துவிட்டு உறங்க தயாராகிக்கொண்டிருந்தது தஞ்சை நகரம். பௌர்ணமி நிலவும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த மின் விளக்குகளும் நகரை ஒளியூட்டிக் கொண்டிருந்தன. நேற்று தோன்றி, இன்று வாழ்ந்து நாளை மடிந்துகொண்டிருக்கும் எத்தனையோ மனித வாழ்க்கையின் சாட்சியாக நிலவொளியில் பெரிய கோயில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கோயிலின் சமீபத்தில் இருந்த பிரதான சாலை வழியாக ஒரு மோட்டார் வண்டி பிரயாணியுடன் சென்று கொண்டிருந்தது. வண்டியின் வேகத்தை போலவே அதில் பயணம் செய்தவனின் எண்ணங்களும் விரைவாக பயணித்துக் கொண்டிருந்ததை அவன் முக மாற்றங்கள் பிரதிபலித்துக்கொண்டிருந்தன.

தஞ்சை சோழர்களின் தலைநகராய் விளங்கியபோது இவ்வழியே தான் இராஜராஜனும், குந்தவை பிராட்டியும் வந்தியதேவனும் சென்றிருப்பார்கள் என்று எண்ணமிட்டதோ அல்லது அவன் மனம் என்னும் ரதத்தை நினைவுகள் என்னும் புரவிகள் காலவெள்ளத்தில் பின்நோக்கி இழுத்துச்சென்றனவோ, அதை அந்த பிரகதீஸ்வரனை தவிர வேறு யார் அறிய முடியும்?

சில நிமிடங்கள் கழித்து மோட்டார் வண்டி நின்றது.

“ஸார்! ஸ்டேஷன் வந்துருச்சி ஸார் இறங்குங்க”, என்றான் டாக்ஸி டிரைவர்.

தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல் திடுக்கிட்டு எழுந்த நம் பிரயாணி, ரயில் நிலையத்தையும் தன் கை கடிகாரத்தையும் பார்த்துவிட்டு வண்டியிலிருந்து வேகமாக கீழே இறங்கினான். டிரைவரிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, ரயில் நிலையத்தினுள் வேகமாக பிரவேசித்தான்.

“ஸார்! ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் வந்துருச்சா?”, என்று டிக்கெட் கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டான்.

“இப்போ கிளம்ப போகுது சார்” என்றார் அவர்.

“சென்னைக்கு ஒரு டிக்கெட் குடுங்க”, என்று சொல்லி பணத்தை தந்துவிட்டு டிக்கெட்டை வாங்கியவன், பிளாட்பாரத்தை நோக்கி விரைந்து ஓடினான். அதே சமயத்தில், “கும்பகோணத்திலிருந்து தஞ்சை திருச்சிராபள்ளி வழியாக சென்னை செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் வண்டி தடம் எண் இரண்டிலிருந்து புறப்படுகிறது” என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்துக்கொண்டிருக்கையில் ரயில் பூம்ம்ம்… பூம்ம்ம்… என்ற ஓசை எழுப்பிக்கொண்டு புறப்பட்டது.

நாம் மோட்டார் வண்டியில் பார்த்த பிரயாணி ரயிலை நோக்கி விரைவாக ஒரு பெட்டியுடன் ஓடி வந்து நகரும் ரயிலின் அன்ரிசர்வுட் கம்பார்ட்மென்ட் ஒன்றின் உள்ளே பிரவேசித்தார். ரயிலினுள்ளே ஜன கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்தான். சில நொடிகளில் அவனுக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.

“ரயில் ஏறிடீங்களா? போன் பண்றேன்னு சொல்லி இருந்தீங்களே? ஏன் இவ்வளவு நேரம் ஆயிட்டது?”, என்று தொடர்ந்து கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தது ஒரு பெண் குரல்.

“இப்போதான் வண்டியில் ஏறினேன். நான் கால் பண்றதுக்குள்ளே நீயே பேசிட்ட. நாளை காலை 6 மணிக்கு சென்னை வந்துடுவேன். மது! கவலை படாதே!”, என்று சொல்லி அலைபேசியில் அழைப்பை முடித்தான்.

நீரின்றி வறண்டிருந்த ஆறுகள், வயல்கள் இருந்த இடத்தில் புதியாய் எழுந்த குடியிருப்புகள், மோட்டார் பம்புகளின் அனுகிரகத்தால் உயிரூட்டப்பட்ட நெல் வயல்கள், வாழைத் தோப்புகள், ரோஜா தோட்டங்கள் என வரட்சியும் பசுமையும் கலந்து இருந்த தஞ்சை பிரதேசத்தின் வழியாக ரயில் வேகமாக சென்றிகொண்டிருந்தது. தஞ்சையிலிருந்து சென்னைக்கு அவன் பலமுறை இதே வழியில் சென்றதுண்டு, ஆனால் இது மிகவும் முக்கியமான பயணம். ஆம்! அவன் எழுதிய புத்தகம் விருது பெற போகிறது. அதுமட்டுமல்ல அவன் மதுவை சந்திக்கப் போகிறான். “மது” ஆகா அந்த பெயருக்குத்தான் எத்தனை சக்தி என்று எண்ணிப்பார்க்கையில் பல நினைவுகள் அவனை சூழ்ந்துகொண்டன.

தொடரும்….