பழையாறைப் பெருநகர்

சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் வெளியிட்டுள்ள மகாமகம் 2016 சிறப்பு மலரில், பழையாறைப் பெருநகர் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளதை தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பழையாறைப் பெருநகர்

கோயில் மாநகராம் குடந்தைக்கு இணையாக தன்னகத்தே பல கோயில்களைக் கொண்டதும், சோழப் பேரரசர்கள் காலத்தில் தஞ்சையின் செல்வத்துக்கும், செழுமைக்கும், அதிகாரத்திற்கும் இணையாக இரண்டாம் தலைநகராக திகழ்ந்ததுமான பெருநகரம் பழையாறை.

வரலாற்றில் பழையாறை
அரிசிலாற்றங்கரையில் அமைந்த இந்நகரம், ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு, நந்திபுரம் என்று பல பெயர்களைப் பெற்றிருந்தது. முதலாம் இராஜராஜன் காலம் வரை பழையாறை என்றே அழைக்கப்பட்ட இந்நகரம் ராஜேந்திரசோழனின் ஆட்சியில் முடிகொண்ட சோழபுரம் என்றும், இரண்டாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ராசராசபுரம் என்றும் வழங்கப்பட்டது. பழையாறை, பட்டீச்சரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரம், பாற்குளம், முழையூர், இராமநாதன் கோயில், சோழன் மாளிகை, தாராசுரம், திருமத்தடி, கோணப்பெருமாள்கோயில், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன் கோயில், உடையாளூர், இராசேந்திரன் பேட்டை ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கிய பகுதியே பழையாறையாகும்.

இந்நகரில் இருந்த 19 கோயில்களில் பல காலவெள்ளத்தில் அழிந்துவிட்டன. பழையாறைப் பகுதியின் நான்கு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேல்தளி, தென்தளி எனும் கோயில்கள் இருந்தன. ஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் வழங்கப்பட்ட பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாதன் கோயில் என்றழைக்கப்படும் நந்திபுரத்து விண்ணகரம், கோபிநாதப்பெருமாள் கோயில், ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படும் பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகிய கோயில்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

சோழன் மாளிகை என்னும் பகுதியில்தான் சோழ மன்னர்களின் மாளிகைகள் இருந்தன. இந்தப் பகுதிக்கு அருகே இருந்த படைவீடுகளான ஆரிய்ப்படைவீடு, பம்பப்படைவீடு, புதுப்படைவீடு, மணப்படைவீடு ஆகியவையே இன்று ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் என அழைக்கப்படுகின்றன.

உறையூர், தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம் என்று சோழ மன்னர்கள் தலைநகரை மாற்றினாலும், விஜயாலய சோழன் முதற்கொண்டு அனைவரும் பழையாறையையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டிருந்தனர். சோழப் பேரரசின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜராஜசோழனும், ராஜேந்திரசோழனும் வளர்ந்தது இந்த நகரிலேதான்.

இந்த நகரம் பற்றிய குறிப்புகள் தேவாரம், பிரபந்தம் உட்பட பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கி.பி. 825 முதல் கி.பி. 850 வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், தன்னை எதிர்த்த சோழ, பாண்டிய கூட்டுப்படையினை தெள்ளாற்றுப் போரில் வெற்றி கண்டு, கடம்பூர், வெரியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர் கொண்டு பாண்டிய  எல்லை வரை விரட்டினான். அதன்பின் சோழர்கள் பல்லவ அரசுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர். நந்திக்கலம்பகம், இந்தப் போர் வெற்றியை “படையாறு சாயப் பழையாறு வென்றான்” என்று குறிப்பிடுகிறது.

தேரோடு பொருந்திய செழுமையான மணிகள் இழைத்த வீதிகளால் சிறப்படைந்து, இவ்வுலகில் நிலைபெற்ற பெருமையினை உடைய நகரமாக விளங்குவது பழையாறை பெருநகர் என்று சேக்கிழார் பெருமான் போற்றுகிறார்.

தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை

தேவாரத்தில் பழையாறை
தேவார மூவரான ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பழையாறை நகரைப் பற்றியும், அங்கு அமைந்துள்ள தலங்களைப் பற்றியும் பாடியுள்ளனர். ஞானசம்பந்தப்பெருமான், திருச்சத்திமுற்றத்தில் இறைவனை தரிசித்துவிட்டு பட்டீச்சரம் வரும் பொழுது வெப்பம் அதிகமாக இருக்கிறது, அவ்வெப்பத்தை தணிக்க விரும்பிய இறைவன் தனது பூதகணங்களைக் கொண்டு முத்துப்பந்தல் அளிக்கிறார். ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களிலிருந்து, பழையாறை பழசை என்று அழைக்கப்பட்டதும், மழபாடி என்பது நகரின் பெயராகும், பட்டீச்சரம் என்பது கோயிலின் பெயராகும் என்பதையும் அறியமுடிகிறது.

பாடல் மறைசூடல் மதிபல் வளையொர்
பாகமதில் மூன்றொர் கணையால்
கூடஎரியூட்டி எழில்காட்டி நிழல்
கூட்டு பொழிசூழ் பழைசையுள்
மாடமழபாடி யுறை வினார்
மேய கடிகட்டர வினார்
வேடநிலை கொண்டவரை
வீடுநெறி காட்டிவினை நீடுமவரே – திருஞானசம்பந்தர்

பழையாறை வடதளி, சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பர் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட இறைவன் உறையும் தலமாகும்.

தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே
அலையினார் பொழில் ஆறை வடதளி
நிலையினானடியே நினைந்துய்ம்மினே – அப்பர்

திவ்யப்பிரபந்தத்தில் பழையாறை
மரக்கொம்புகளிலே தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள் கூவ, மயில்கள் ஆடும் எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்திலேதான், கொடிய காடுகளெல்லாம் வனவாசம் செய்த இராமபிரான் தன் துணைவி மற்றும் தம்பியுடன்  உறைகிறான் என்று திருமங்கையாழ்வார், பெரிய திருமொழியில் இத்திருநகரை மங்களாசாசனம் செய்துள்ளார்.

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி
காதல் துணையாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர்
தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ
மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர
விண்ணகரம் நண்ணு மனமே

பொன்னியின் செல்வனின் பழையாறை
வீரசோழிய உரையில், சுந்தர சோழரைப் பழையாறை நகர்ச் சுந்தரசோழர் என்று குறிப்பிட்டுள்ள பாடலுடைய பின்னணியில் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்திரன் ஏறக் கரியளித்தார் பரி ஏழளித்தார்
செந்திரு மேனித் தினகரர்க்குச் சிவனார் மணத்துப்
பைந்துகில் ஏறப் பல்லக்களித்தார் பழையாறை நகர்ச்
சுந்தர சோழரை யாவரொப் பாரித் தொன்னிலத்தே

போர் ஒன்றில் தன் ஐராவதத்தை இழந்த இந்திரன், அதற்கு இணையான யானை ஒன்றை தேடி அலைந்து, கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழனிடம் வருகிறான். ஆனால், சுந்தரசோழரோ, தன்னிடம் ஐராவதத்திற்கு இணையான யானை இல்லையென்றும், அதனினும் சிறந்த களிறுகளே உள்ளனவென்றும் சொல்லி, தன் யானைகளைக் காட்டுகிறார். குன்றுகளைப் போல நின்ற ஆயிரம் வேழங்களில் எதை எடுப்பது என்று குழம்பியிருந்த இந்திரனுக்கு, தானே ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை அடக்க வஜ்ராயுதத்தினும் வலுவான ஓர் அங்குசத்தையும் தந்தார் சுந்தரசோழர்.

மற்றோர் சமயம், தன்னை விழுங்க முயன்ற ராகுவுடனான போரில், அவனை வீழ்த்திய சூரியன் தன் தேர்க் குதிரைகள் ஏழும் இறந்துவிடவே, பயணிக்க முடியாமல் திகைத்து நின்றான். அதைக் கண்ட சுந்தர சோழர் சூரியனுக்கு ஏழு குதிரைகளை தந்து பயணத்தை தொடங்குமாறு வேண்டினார்.

சிவபெருமானுக்கும் உமையவளுக்கும் கயிலையில் நடந்த திருமணத்தில் பெண் வீட்டார் பல்லக்கை கொண்டுவர மறந்துவிட்டனர். ஊர்வலத்திற்கு எருது மட்டுமே இருந்தது. இதையறிந்த சுந்தரசோழர் பழையாறையிலிருந்து தனது முத்துப்பல்லக்கை இறைவனுகு காணிக்கையாக கொடுத்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு இந்த உலகில் வேறு யாரை உவமை சொல்லமுடியும்.

இத்தகைய பல்வேறு வகையிலான பெருமைகளைக் கொண்டு பழையாறைப் பெருநகர் பல நூற்றாண்டு வரலாறுகளை சந்தித்து, பல மன்னர்களால் ஆளப்பெற்று பீடுடன் நின்று வரலாற்று புத்தகங்களில் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய வேளையில் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பழையாறைக்கும் அதைச் சார்ந்த பகுதிகளுக்கும் சென்று நம் முன்னோர்கள் தடம்பதித்த இடங்க்ளுக்குச் சென்று அவர்தம் பெருமையை நினைவுகூறுவோம்.

மலரில் வெளியாகியுள்ள பக்கங்கள்…

173174175176நன்றி: மலர்க் குழு, மகாமகம் 2016 சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம்.

Advertisements