சதய விழா நாயகன்

இரவெல்லாம் மேகங்களின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த சூரியன் எழ மனமன்றி கீழ்வானத்திலிருந்து மெல்ல வெளியே வந்துகொண்டிருந்தான். அவன் வருகைக்காக காத்திருந்த தாமரை மொட்டுக்கள் மெல்ல இதழ் விரிக்கத் துவங்கின. அந்தத் தாமரைக்குளத்தின் அத்தனை மொட்டுக்களும் சற்று நேரத்தில் செந்தாமரையாகவும் வெண்தாமரையாகவும் விரிந்து ஒரு மலர் மெத்தை விரித்தாற்போல குளத்தின் நீர் தெரியா வண்ணம் மூடிக்கொண்டன. குளக்கரையில் மகிழ மரங்களும், செண்பகப் பூச்செடிகளும் பூத்து அந்த இடம் முழுதும் மணம் வீசிக்கொண்டிருந்தது.

அது அரண்மனையின் நந்தவனக் குளம். நான்கு புறமும் அழகாய் சீர் செய்யப்பட்டு கருங்கல் படிகள் அமைத்து வைக்கப்பட்டிருந்தன. குளத்தருகே ஒரு சிறு குடிசை இருந்தது. அதில் ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் மெல்ல எண்ணெய் குறைந்து மங்கிக்கொண்டிருந்தது. அந்த விளக்கையே பார்த்துக்கொண்டு ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். அவளது சிவந்த கண்களும், சோர்வான கன்னங்களும் அவள் அன்றிரவு உறங்கவில்லை என தெள்ளத்தெளிவாய் எடுத்துரைத்தன. சூரியனின் ஒளிக்கதிர்கள் மெல்ல அந்த வீட்டிற்குள் சாளரங்கள் வழியே நுழையத் துவங்கியது. விடிந்தது கூடத் தெரியாமல் அவள் அந்த அணைந்த விளக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். குடிசைக்குச் சற்று தொலைவில் நெருங்கி வரும் காலடி சப்தம் கேட்டு மெல்ல அவள் முகம் மலர்ந்தது. சில நிமிடங்களில் அந்தக் குடிசையின் வாசல் கதவை தட்டும் சப்தம் கேட்டது.

“செல்வி! செல்வி!” என்று வாசலில் ஓர் ஆண் குரல்.

செல்வி வேகமாக சென்று கதவைத் திறந்தாள். அறுபது வயது மதிக்கத்தக்க தலை நரைத்த ஒரு கிழவன் நின்றுகொண்டிருந்தான். வயதானாலும் நல்ல உறுதியான உடலும் மிடுக்கான நடையுடனும் உள்ளே நுழைந்தான். அவன் மேல்சட்டையும் ஒரு வேட்டியும் அணிந்திருந்தான். அவன் சட்டையில் வரையப்பட்டிருந்த புலிச்சின்னம் அவன் சோழ தேசத்துக் காவல்படையைச் சேர்ந்தவன் என உறுதிசெய்தது. அவன் பெயர் மாடத்தேவன். சுந்தர சோழர் காலத்திலிருந்தே படையில் இருந்து பல போர்களில் பங்குபெற்றவன். தஞ்சையில் புதிய அரண்மனையை சுந்தரசோழர் கட்டியபோது கோட்டைக் காவலனாகப்  பணியாற்றியவன். சில ஆண்டுகள் கழித்து, அவன் வயதும் அதிகரிக்க நந்தவனக் காவலனாக நியமிக்கப்பட்டான். அரண்மனை நந்தவனத்திலேயே ஒரு குடில் அமைத்துக்கொண்டு தாய் தந்தை இல்லா தன் பேத்தியுடன் வாழ்ந்துவருகிறான். சுந்தர சோழர் தஞ்சையை விட்டு காஞ்சியில் ஆதித்த கரிகாலன் எழுப்பிய பொன் மாளிகைக்குச் சென்ற பிறகு, தஞ்சை அரண்மனை தன் பொலிவினை மெல்ல இழந்தது. மதுராந்தகனான உத்தம சோழனின் தலைநகராக இருந்தாலும் தஞ்சை தன் பழைய பொலிவு இல்லாமல்தான் இருந்தது. எனினும் சில புதிய பகுதிகள் உத்தம சோழனால் அரண்மனை வளாகத்தில் எழுப்பப்பட்டது. ஆனாலும் சுந்தர சோழர் காலத்து இந்த நந்தவனமும் குளமும் சேர்த்து பல பகுதிகள் கவனிப்பில்லாமல் இருந்தன. பொதுவாக மாடனுக்கு வேலை அதிகம் இருப்பதில்லை. தினமும் காலை அந்த குளத்தில் குளித்துவிட்டு ஒரு முறை அந்த நந்தவனத்தை சுற்றி வருவான். பிறகு நாள் முழுவதும் தன் பேத்தியுடனே பேசிக்கொண்டு காலம் கழிப்பான். செல்விக்கும் தோழிகள் என யாரும் இல்லை. அவள் தாத்தா சொல்லும் போர்க் கதைகள் தான் அவளுக்கும் ஒரே பொழுதுபோக்கு. நேற்று சூரியன் மறைந்து இரண்டு நாழிகை கழித்து மாடனுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. அப்போது சென்றவன், எந்தவொரு தகவலும் சொல்லாமல் பொழுது புலர்ந்து இரண்டு நாழிகை கழித்தே வந்தான்.

“போ தாத்தா! என்கிட்ட பேசாத. இதோ வரேண்ணு சொல்லிட்டு போன நீ, இப்போதான் வந்துருக்க.. நான் எவ்வளவு நேரமா தனியா இருக்கறது?”, என்று உள்ளே நுழைந்த மாடனிடம் கோபித்துக்கொண்டாள் செல்வி.

“நான் என்னம்மா பண்ணுவேன்… எப்பவோ ஒரு நாள் தானே வேலை இருக்குணு கூப்பிடுறாங்க. அதான் போனேன். நேத்து நான் செஞ்ச வேலைக்காக ஒரு பொற்காசு கொடுத்தாங்க. உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ”, என்று சொல்லி ஒரு பொற்காசை கொடுத்தான்.

தன் கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு செல்வி, “அப்படி என்ன தான் வேலை தாத்தா?” என்றாள்.

“ஒரே ராத்திரியில மொத்த அரண்மனையையும் சுத்தம் செய்ய சொல்லி உத்தரவு வந்துச்சு. அரண்மனை வேலையாட்கள் தவிர காவலாளிங்க தான் நிறைய பேர் வேல பாத்தோம். எதோ ஒரு பெரிய அரச விழா நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். யாருக்கும் எந்த செய்தியும் இதுவரைக்கும் தெரியல. எப்பவுமே கவனிக்கப்படாத சுந்தர சோழர் காலத்து கட்டடங்களடக்கூட இப்போ சரி செஞ்சிருக்காங்க. பழையாறையிலிருந்து பெரிய பிராட்டியார் கூட வந்திருக்காங்க”. என்று மாடன் சொல்லிக்கொண்டிருக்கையில், கோட்டை மதில்களில் உள்ள முரசங்கள் அதிரும் சப்தமும் எக்காளங்கள் முழங்கும் ஒலியும் விண்ணைக் கிழித்தன. அது என்ன என்று அறியும் ஆவலுடன் செல்வி வேகமாக முகம் கழுவிக்கொண்டு கோட்டையின் கிழக்கு பகுதியில் இருந்த கதவுகள் நோக்கி ஓடினாள்.

தஞ்சை நகரம் முழுவதும் கோட்டையின் கிழக்கு வாசலை பழையாறையுடன் இணைக்கும் தஞ்சை ராஜபாட்டையின் இருபுறமும் குழுமியிருந்தது. தஞ்சை மக்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்ற வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு பெரிய ஊர்வலம் தஞ்சை அரண்மனை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஊர்வலத்தில் ஆரம்பத்தில் புலிகொடி ஏந்திய வீரர்கள் கம்பீரமாக நடந்து வந்தார்கள். அவர்களை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெண்புரவிகள் மீது சோழ தேசத்து காவல்படை வீரர்கள் அணிவகுத்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நான்கு தங்க முகப்பட்டைகளுடன் அலங்கரிக்கப்பட்ட கரும்குதிரைகள் பூட்டிய ரதம் வந்தது. வெண்பட்டும் தங்க ஜரிகையும் சேர்த்து நெய்த வேட்டியும், இடையில் வெள்ளி அரைஞாணும், தந்த உரையுடன் கூடிய தங்க கைபிடியுள்ள வாளும் தரித்து, தோலில் சிவப்பு நிற மேல் துண்டும் அணிந்து, தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளுடனும், சதய நட்சத்திரத்தில் தோன்றிய சரித்திர நாயகன், பொன்மாளிகை துஞ்சிய தேவரான சுந்தர சோழரின் மைந்தர், வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரர், சோழதேசத்தின் செல்லப்பிள்ளை, பொன்னியின் செல்வன், அருள்மொழிவர்மன், இளவரசருக்கான கிரீடம் தரித்து அமர்ந்திருந்தார். அவருக்கருகில் அமைதியே உருவான, கனிவான கண்களுடைய கொடும்பாளூர் இளவரசி, அருள்மொழிவர்மரை காதலித்து மணம் புரிந்தவள், தஞ்சை வயல்களில் பசுமையை பிரதிபலிக்கும் பச்சை நிற பட்டுச்சேலை உடுத்தி, கழுத்தில் மங்களநாணும், மரகத மாலையும் அணிந்து அமர்ந்திருந்தாள்.

அந்த தேரை தொடர்ந்து பட்டத்து யானையின் மீது சோழ தேசத்தின் குலக்கொடி, அருள்மொழிவர்மரின் திருத்தமக்கையார், வல்லத்தரசர் வந்தியத்தேவரின் துணைவியார், இளைய பிராட்டியார் குந்தவை நாச்சியார் வந்தியத்தேவர் சமேதராய், சிவப்பு வண்ண பட்டுடுத்தி, மாணிக்க மாலைகள் அணிந்து, தலையை நடுவகிடிட்டு இரண்டாக பிரித்து வலப்புறம் சூரியபிரபை, இடப்புறம் சந்திர பிரபை தரித்து, கார்குழலை ஒய்யாரமாக அடுக்கு கொண்டையாக்கி, முத்தாலும் தங்கத்தாலும் அலங்கரித்து ஒய்யாரமாக வந்தார்.
இளைய பிராட்டியை தொடர்ந்து அடுத்த யானையின் மீது ஆறடி உயரமுள்ள, கட்டுடலுடன், மெல்லிய மீசையுடன், சோழ தேசத்தின் தனாதிகாரியும், தானியாதிகாரியுமான, பதினாறு போர்களங்களைக் கண்டு, உடலில் அறுபத்து நான்கு புண்களை ஆபரணமாய் பூண்டு பனைமரக் கொடியுடைய பழுவூர் அரசர் பெரிய பழுவேட்டரையரின் தம்பி, தஞ்சையின் கோட்டை காவல் தலைவன் சிறிய பழுவேட்டரையர் வந்தார்.

மெல்ல அந்த ஊர்வலம் அரண்மனை மதிலை கடந்து அரண்மனையின் முக்கிய நுழைவாயில் அருகே வந்து நின்றது. அவர்களை வரவேற்க சிவனருட்செல்வர் கண்டராதித்தரின் பட்டமகிஷி பெரிய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் வெண்பட்டுடுத்தி நெற்றியில் திருநீறு அணிந்து அரண்மனையிலிருந்து வெளியே வந்தார். அவரை பார்த்தவுடன் அருள்மொழிவர்மர் ரதத்திலிருந்து கீழிறங்கி அவர் பாதங்களில் நிலம்பட விழுந்து வணங்கினார். பெரிய பிராட்டி அவரின் உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தாள். அருள்மொழிவர்மரை அரசவைக்கு அழைத்து சென்றார். அனைவரும் ஆசனத்தில் அமர்ந்திருக்க சக்ரவர்த்தியின் சிம்மாசனம் மட்டும் வெறுமையாக இருந்தது. அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

கட்டியக்காரன்,
“சிவநேசச் செல்வர் கண்டராதித்த தேவரின் தவப்புதல்வர், திருவயிறு உதித்த தேவர், மதுராந்தக உத்தம சோழர் அரசவை வருகிரார்! பராக்! பராக்!”, என்று உரக்கக் கத்தினான். அரசவையின் வாசலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தவரெல்லாம் அதிரவைக்கும் படியாக, மதுராந்தகரான உத்தம சோழன் காவி உடை தரித்து, அரச அடையாளங்கள் களைந்து ஒரு துறவிபோல அரசவைக்குள் பிரவேசித்தார். ஆசனத்தில் அமர்ந்திருந்த தன் தாயார், பெரிய பிராட்டியார், செம்பியன் மாதேவியின் பாதம் தொட்டு பணிந்தார். அரியாசனம் ஏறாமல் அருள்மொழிவர்மரின் அருகில் நின்றார். அருள்மொழிவர்மனும் எழுந்து நிற்க, அரசவையில் இருந்த அனைவரும் எழுந்தனர்.

மதுராந்தகன் கைகளால் ஓசை எழுப்ப பணிப்பெண்கள் தங்கத் தட்டு ஒன்றை பட்டுத் துணியால் மூடி எடுத்து வந்தனர். “சபையோர் அனைவருக்கும் வணக்கம். இன்றோடு நான் இந்த சோழதேசத்தின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. நான் அரச பொறுப்பை ஏற்கும் போது ஏற்பட்ட பல துக்க சம்பவங்கள் நம்மால் என்றுமே மறக்கமுடியாதவையாகிவிட்டன. சுந்தர சோழருக்கு பிறகு யார் என்ற பிரச்சினையில் சிக்கி சோழ தேசம் சின்னாபின்னம் ஆகாமல் தடுக்க, எனக்காக உரிமையை விட்டுக்கொடுத்த ஆருள்மொழிவர்மனையே இப்போது இந்த தேசத்தின் அரசராக்கிவிட்டு, நான் என் தந்தையின் விருப்பப்படி சிவப்பணி மேற்கொள்ள முடிவுசெய்திருக்கிறேன். இதுவரை என் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்த சோழ மக்கள் அனைவருக்கும், அதிகாரிகள் அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறி மதுராந்தகரான உத்தம சோழன் அந்த மணி மகுடத்தை அருள்மொழிவர்மருக்கு சூட்டினார்.

“இராஜராஜ சோழன் வாழ்க! இராஜராஜ சோழன் வாழ்க!”, என்று சபையில் கூடியிருந்தோர் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

இராஜராஜர் சிம்மாசனத்தில் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டார். அவர் வாழ்க்கையின் பல சம்பவங்கள் மனக்கண்முன் தோன்றி மறைந்தன. இதற்காகத்தானா இத்தனையும் நடந்தது? என்று எண்ணினார். இளைய பிராட்டி குந்தவை சொன்னது உண்மையாயிற்றே என்று வியந்தார். தான் பட்டமேற்பேன் என்று அவள் கொண்ட நம்பிக்கை நிறைவேற்றிவிட்டதே என்றெண்ணி திகைத்தார். தன் வலப்புறம் திரும்பி குந்தவையை பார்த்தார், அவள் முகத்தில் நினைத்தை அடைந்துவிட்ட ஒரு மகிழ்ச்சியும், கர்வமும் இருந்தது. இராஜராஜரின் மனதில் ஒரே எண்ணம் மட்டும் தான் இருந்தது. “தன் தமையன் வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலன் கொலை சூழ்ச்சி செய்தவரை கண்டுபிடிக்க வேண்டும். அவரை தண்டிக்க வேண்டும். அதற்கு பழிவாங்க வேண்டும்”, என்பதே அது.

Raja-Raja-cholan1

பின்குறிப்பு:

சோழ நாட்டை கலையின் உச்சிக்கு, புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற ஒப்பற்ற தமிழ் வேந்தன், மக்களின் மனங்களை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கவர்ந்து ஆட்சி செய்துகொண்டுள்ள சோழ தேசத்தின் செல்லப்பிள்ளை, பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதய தினத்தன்று அவனை நினைவுகூறும் வகையில், கல்கியின் பொன்னியின் செல்வன் உண்டாக்கிய தாக்கமே இப்பதிவு.

Advertisements

5 thoughts on “சதய விழா நாயகன்

  1. “சுந்தர சோழருக்கு பிறகு யார் என்ற பிரச்சினையில் சிக்கி சோழ தேசம் சின்னாபின்னம் ஆகாமல் தடுக்க, எனக்காக உரிமையை விட்டுக்கொடுத்த ஆருள்மொழிவர்மனையே இப்போது இந்த தேசத்தின்………………. அரச பணியை விட்டுவிட்டு நான் என் தந்தையின் விருப்பப்படி சிவப்பணி மேற்கொள்ள முடிவுசெய்திருக்கிறேன்”
    _

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s