வெற்றித்திருமகன்

சோமநாத சுவாமி கோயில், கீழப்பழையாறை
சோமநாத சுவாமி கோயிலின் இன்றைய தோற்றம்

குடகு மலையிலிருந்து வாரி வந்த அத்தனை செல்வங்களையும் சோழ நாட்டுக்கு தருவதற்காக நன்றி சொல்லும் ஆடிப் பெருக்கு விழா முடிந்து சில நாட்கள் சென்றிருந்தாலும், சற்றும் வனப்பும் வளமையும் குறையாமல் சுழிந்து சென்ற பொன்னி நதியின் கிளை நதியான அரிசிலாற்றங்கரையில் அமைந்திருந்த பழையாறை என்னும் பெருநகர் மாளிகைகள் காலைக் கதிரவனின் கதிரொலியால் பொன் மாளிகைகளாக காட்சியளித்துக்கொண்டிருந்தன.

தூரத்தே எழுந்த சோமேசர் ஆலய மணியோசை காலை நேர பூசைகள் முடிந்ததை அறிவித்தன. அந்த மணியோசையால் எண்ண ஓட்டங்கள் கலைக்கப்பட்டு கனவிலிருந்து மீண்ட அந்தப் பெண்மணி, தான் நின்றிருந்த மாளிகை உப்பரிகையிலிருந்து நகரை ஒரு முறை நோக்கினாள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அழகும் அமைதியும் நிறைந்த அந்த நகரில் தான் இருப்பதை எண்ணி பெருமை பட்டுக்கொண்டு சோமேசருக்கு நன்றியும் சொன்னாள்.

தஞ்சைக்கு செல்லும் ராஜபாட்டையில் இரண்டு குதிரைகள் புழுதி பரக்க தன் மாளிகையை நோக்கி வருவதை கண்ட சோழ தேசத்து குலக்கொடி, சுந்தர சோழரின் செல்வப் பெண், சக்ரவர்த்தி ராஜராஜசோழரின் திருத்தமக்கையார், குந்தவை பிராட்டியாரின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. இளையபிராட்டிக்கு நெருங்கி வரும் முதுமையின் சின்னங்களான நரைத்த கேசம் கூட அவளது கம்பீரத்தை மேலும் கூட்டியது. சொல்லவொன்னா பூரிப்புடன் கீழ்தளத்துக்கு வந்த குந்தவை எதிர்பார்த்த செய்தியையே வீரர்கள் கொண்டுவந்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம், பழையாறை மாநகர் மாவிலை தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இளநங்ககையர் நீராடி புத்தாடை உடுத்தி, தெருவெங்கும்  நீர் தெளித்து கோலமிட்டனர். அரண்மனை பெண்டிர் அனைவரும் அந்த நாளை தாங்கள் மறந்ததை எண்ணி தங்களையே நொந்துகொண்டனர். தாங்கள் மறந்தாலும், எதிலும் கவனம் தவறாத தங்கள் இளைய பிராட்டியை எண்ணி பெருமைகொண்டனர். மாளிகையின் அலங்காரங்களையும் உணவுக்கான அனைத்து வேலைகளையும் தானே முன்னின்று நடத்தினாள். மற்ற அரசிகளையும், தோழியரையும் துரிதப்படுத்தி வரவேற்ப்பு ஏற்பாடுகளையும் செய்தாள். சோமேசர் ஆலய உச்சி கால பூஜை மணியோசை கனீர் கனீர் என நகரமெங்கும் ஒலித்தது. கோவிலின் மணியோசையை  அடங்கும் முன்பே தூரத்தே எழுந்த பேரிகை ஒலி மெல்ல நகரை நெருங்கியது.

காளைகள் மீது முரசங்கள் அதிர, குதிரை படை வீரர்கள் முன்னே அணிவகுத்து வர, எருதுகள் பூட்டிய மாட்டுவண்டிகளில் போரில் அடைந்த ஆயுதங்களும், விலையுயர்ந்த அணிகளும், மணிகளும், பொன்னும் குவியிலாக கொண்டுவரப்பட்டன. அதைத்தொடர்ந்து வந்த பட்டத்து யானைமீது சோழ தேசத்து சக்ரவர்த்தி அருள்மொழிவர்மனான இராஜராஜ சோழர் அரச அடையாளங்கள் அணிந்து கம்பீரமாய் வீற்றிருந்தார். மாளிகையை ஊர்வலம் நெருங்கியும், குந்தவையின் கண்கள் தன்னையும் தாண்டி நோக்குவதை கண்ட இராஜராஜர் புன்முறுவல் பூத்தார். தான் தான் பரந்துவிரிந்த அந்த சோழ தேசத்தின் மன்னனாலும், வேங்கியையும், மான்யகேடத்தையும் வென்ற படையின் தலைவனானாலும் அன்றைய விழா நாயகன் தானல்லவென்பதை அவர் உணர்ந்து கொண்டதை அந்த புன்முறுவல் பறைசாற்றியது. பட்டத்து யானைமீதிருந்து இறங்கிய அவரைத்தொடர்ந்து வந்த நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வந்த இளைஞன் இறங்கினான். வேங்கி, மான்யகேட போர்களில்  முன்னின்று தனது படைகளை நடத்தி வெற்றி வாகை சூடிய தன் மகன் மதுராந்தகனான இராஜேந்திர சோழனை முன் அனுப்பி தான் பின் நின்றார் இராஜராஜசோழர். முதல் வெற்றி ஈட்டி வந்த தங்கள் செல்லப்பிள்ளையை அரசிகள் அனனவரும் கண்டு உள்ளம் பூரித்தனர். உலகை ஒரே குடையின் கீழ் ஆளும் பிள்ளை பெரும் அடையாளங்களை கொண்ட வானதியை தன் தம்பிக்கு மனைவியாக்கியதை எண்ணி குந்தவை பெருமை கொண்டாள். தன் வளர்ப்பு மகன் கொண்ட வெற்றியால் அவள் உள்ளம் ஆனந்தக்கூத்தாடியது. அனைவரும் அவன் வருகைக்காக காத்திருக்க, ராஜேந்திரன் ஓடி வந்து முதலில் பஞ்சவன்மாதேவின் பாதம் தொட்டு பணிந்தான். கூடியிருந்த மக்களனைவரும், தன்னை பெற்ற தாயையும் வளர்த்த அத்தையையும், ஏன் பெரிய பிராட்டியாரையும் கூட விடுத்து இராஜேந்திரன் தன் சிற்றன்னையான பஞ்சவன்மாதேவியின் பாதம் பணிந்ததை ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ஆனால், குந்தவைக்கோ, வானதிக்கோ இது சற்றும் விசித்திரமாக தோன்றவில்லை. வானதி, பெற்ற மகனுக்காக, தன் வாழ்வையே அர்பணித்த பஞ்சவன் மாதேவிதான், இராஜேந்திரனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையான இன்று அவனை ஆசிர்வதிக்க சிறந்தவள் என்றே எண்ணி ஆனந்தம் கொண்டாள். அன்று தன் முதல் வெற்றியை ஈட்டியை ‘மும்முடிச்சோழனின் களிறு’ இராஜேந்திரனை அடைந்த ஜெயஸ்ரீயும் இராஜ்யஸ்ரீயும் என்றுமே அவனை விட்டு விலகவில்லை. Rajendra-Chola வடங்கே கங்கை முதல் கிழக்கே கடாரம் வரை கடல் கடந்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய இராஜேந்திரசோழனின் மெய்கீர்த்தி

ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர விருநில மடந்தையும்
போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்
தன்பெருந் தேவிய ராகி யின்புற
நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர்வன வாசியும்
சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்
நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகட லீழத் தரசர்த முடியும்
ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்
முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10)

சுந்தர முடியு மிந்திர னாரமும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவிற் சினவி யிருபத் தொருகால்
அரசுகளை கட்ட பரசு ராமன்
மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20)

பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்
டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு
பீடிய லிரட்ட பாடி யேழரை
யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்
விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு
முதிர்பட வல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமணைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)

சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டுறை சோலைத் தண்ட புத்தியும்
இரண சூரனை முரணறத் தாக்கித்
திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40)

தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி
ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்ம
னாகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50)

துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்
புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்
வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்
ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60)

விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்
தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்
கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்
தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65)
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு…”

துணைநின்றவை: தமிழ் விக்கிபீடியா
கல்கி, அகிலன் மற்றும் பாலகுமாரன் அவர்களின் கதைகளை படித்த தாக்கம்.

Advertisements

3 thoughts on “வெற்றித்திருமகன்

  1. பொருத்தமான நாளில் ஆயிரமாண்டுகளுக்குப் பிந்தைய வரலாற்றுக் காலத்திற்கு அழைத்துச்சென்றமையறிந்து மகிழ்ச்சி. எழுத்தும், நடையும் மிக அருமை.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s