ஆழ்வார் – ஆழ்ந்தேன்

புத்தகம் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் சுஜாதா
பதிப்பகம் கிழக்கு
விலை ரூ.1505157

இறைவனை, குறிப்பாக திருமாலை இன்ன குலத்தார், இன்ன இனத்தார், இன்ன மொழியால், இந்த வழியால் மட்டும்தான் வணங்க வேண்டும் என்று இருந்த பல தடைகளை தாண்டி, இறைவனை குழந்தையாக்கி, காதலனாக்கி, கண்ணனாக்கி சொல்மாலை சூட்டிய ஆழ்வார்களை பற்றி படிக்க சமானியனுக்கும் ஓர் வாய்ப்பு நல்கிய சுஜாதாவுக்கு நன்றி.

ஆழ்வார் என்ற சொல்லின் அர்த்தம், அச்சொல்லின் கல்வெட்டுக் குறிப்புகள் என தொடங்கி ஆழ்வார்களை முதலில் வரிசை படுத்துகிறார். பின், ஒவ்வொரு ஆழ்வாருக்கும் தொடர்புடைய குருப்பரம்பரை / மரபுக் கதையையும், அவர்கள் அருளிய பாசுரங்களில் சிலவற்றை, அவற்றின் பா வகையுடன் விளக்குகிறார்.

எனக்குப் பிடித்த ஆழ்வார்களை பற்றிய மரபுக்கதை

திருக்கோவிலூருக்கு ஒருமுறை பொய்கையாழ்வார் சென்றார். நல்ல மழை. இருள். ஒரு முனிவருடைய ஆசிரமத்தில் இடை கழியில் மழைக்கு ஒதுங்கினார். சிறிய இடம். ஒருவர் மட்டும் படுக்கலாம். படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். ‘ஒருவர் படுக்கலாம் எனில், இருவர் உட்காரலாம்’, என்று இருவரும் உட்கார்ந்தார்கள். சற்று நேரத்தில் மூன்றாவதாக பேயாழ்வார் வந்து சேர்ந்தார். ‘இருவர் உட்காரலாம் எனில், மூவர் நிற்கலாம்’, என்று அவரும் ஒதுங்க மூவரும் நின்று கொண்டனர். இருளில் அவர்களுடன் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர்ந்தனர். இவர்களோடு நெருக்கத்தை விரும்பிய பகவான், இவர்களை நெருக்கத் தொடங்கினார். யார் இப்படிப்போட்டு நெருக்கிறார்கள் என்று காண்பதற்காக ‘வையம் தகளியா’ என்று தொடங்கி, பொய்கையார் நூறு பாடல்களை பாடினார். பூதத்தார், ‘அன்பே தகளியா’ என்று தொடங்கி நூறு பாடல்களை பாடினார். முதல் நூறு பாடல்களால் புறவிருள் அகன்றது. இரண்டாவது நூறு பாடல்களால் அகவிருள் அகன்றது. பகவானை அவர்களால் தரிசிக்க முடிந்தது. அந்தத் தரிசனித்தின் பரவசத்தில் பேயாழ்வார் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று நூறு பாடல்களைப் பாடினார்.

எனக்கு பிடித்த சில பாசுரங்கள்

நெய்க்குடத்தைப் பற்றியேறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம் பெற உய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணையோடும்
பண்டன்று பட்டினம் காப்பே (445) – பெரியாழ்வார்

நெய்க்குடத்தில் ஏறும் எறும்புகள் போல் என்னைக் கைப்பற்றிக்கொண்ட நோய்களே, பிழைத்து ஓடிச்செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தன் பாம்பணையோடு குடிவந்து விட்டான். முன்போல் இல்லை இந்த உடல், பட்டினம் போல் காவல் உடையது பத்திரமானது.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே! – ஆண்டாள்

இந்தப் பாடலில் ஆண்டாள், நாராயணன் வாய்வைத்து முழங்கிய சங்கிடம் சில கேள்விகள் கேட்கிறார். அவன் உதடுகள் என்ன வாசனை? கற்பூரமா? தாமரைப்பூவா? அவன் வாய் தித்திக்குமா? விரும்பிதான் கேட்கிறேன். சொல், சங்கே!

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யாண்வேண்டன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே – குலசேகர ஆழ்வார்

அரச பதவியை துறந்த ஆழ்வார் சொல்கிறார், தேவலோகத்து அரம்பையர்கள் என்னைச் சூழ்ந்துகொள்ள, தேவலோகத்தையும் பூமியையும் அரசாளும் பதவி கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். தேன் நிறைந்த பூஞ்சோலைகளை உடைய திருவேங்கடத்தின் சுனையில் ஒரு மீனாய்ப் பிறந்தால் போதும் என்று.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவலன் பரந்தே – நம்மாழ்வார்.

அவன் உண்டு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் இருக்கிறான். இருக்கிறான், இல்லை என்னும் இரண்டு நிலைகளையும் உடையதாலே உருவமுள்ளவையும் உருவமற்றவையும் பெருமானின் ஸ்தூல சூட்சும சாரீரமாக கருதப்படும். இவ்விரண்டு தன்மைகளோடு எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளவன் அவன். அவன் தான் இறைவன். அவன் தான் திருமால்.

Advertisements

2 thoughts on “ஆழ்வார் – ஆழ்ந்தேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s